செய்திகள்

வீட்டு மனையுடன் இலவச பட்டா கோரி பீடித் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-22 08:22 GMT   |   Update On 2019-06-22 08:22 GMT
வீட்டு மனையுடன் இலவச பட்டா கோரி ஆகஸ்ட் 13-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பீடித்தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் சம்மேளன தலைவர் எம்.பி. ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு பீடித் தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு மற்றும் பஞ்சபடி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தொழிலாளர்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப்பெரிய 30-க்கும் மேற்பட்ட டிரேட் மார்க் பீடி கம்பெனிகளும், 100-க்கும் மேற்பட்ட சிறிய பீடி கம்பெனிகளும் உள்ளன. இந்த கம்பெனிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பீடித் தொழிலாளர் சேமநல திட்டங்களான கல்வி உதவித் தொகை, மருத்துவ சிகிச்சை, மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டம், ஓய்வூதியம் போன்றவைகள் பெரும் பகுதி தொழிலாளருக்கு கிடைக்காமல் உள்ளன.

இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு பீடி தொழிலாளர் சட்டங்களை அமலாக்குவதற்கு தொழிலாளர் துறையின் அமலாக்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரசுக்கு சொந்தமான நத்தம் மற்றும் தரிசு நிலங்களை பீடித் தொழிலாளர்கள் வீட்டு கட்டிக் கொள்வதற்கு வீட்டுமனையுடன் இலவச பட்டா வழங்கியும், மானியத்தை தொகை ரூ.4 லட்ச மாக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை தொழிலாளர்கள் மத்தியில் விளக்கி ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை பிரசாரம் மேற்கொள்வது என்றும், ஆகஸ்ட் 13-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News