செய்திகள்

நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை- கராத்தே தியாகராஜன்

Published On 2019-06-22 06:46 GMT   |   Update On 2019-06-22 06:46 GMT
நாங்கள் யாரையும் பல்லக்கு தூக்க சொல்லவில்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேச்சுக்கு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.என்.நேரு பேச்சுக்கு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சியில் வென்ற திருநாவுக்கரசர் கூறுகையில், நான் 4½ லட்சம் ஓட்டில் ஜெயித்தேன். 2½ லட்சம் ஓட்டு கூட்டணிக்கு விழுந்தது. 2லட்சம் ஓட்டு எனக்காக விழுந்தது என்றார். அன்றைக்கே இது பற்றி மு.க.ஸ்டாலின் தனது மன வருத்தத்தை வெளியிட்டார்.

தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணி, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது போன்ற காரணங்களால் தான் தாங்கள் வெற்றி பெற்றதாக மற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் கூறுகையில், திருநாவுக்கரசர் மட்டும் அப்படி தெரிவித்தார்.

அதில் இருந்தே திருச்சியில் தி.மு.க.வினருக்கும், காங்கிரசாருக்கும் சண்டை ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் இது.


என்னை பொறுத்தவரை கே.என்.நேரு முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர். ஆனால் எந்த கருத்தானாலும் அதை இறுதி செய்வது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிதான் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் கடந்த முறை சென்னை மாநகராட்சியில் 200 சீட்டுக்கு 14 கொடுத்தனர். கூட்டணி தர்மத்துக்காக தலைமைக்கு கட்டுப்பட்டு அதை ஏற்றுக்கொண்டோம். ஒவ்வொரு கட்சியும் தனித்து நிற்கத்தான் ஆசைப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தொண்டர்களின் தேர்தல்.

தனது கட்சியின் கருத்தை கே.என்.நேரு கூறியுள்ளார். அவர் மூத்த தலைவர் என்பதால் சொல்வதற்கு உரிமை உள்ளது. காங்கிரஸ் செயற்குழுவில் எங்களின் கருத்தை சொன்னோம்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க. தலைவரிடம் பேசி என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் இதுபோன்ற மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். தலைவர்கள் கூடிப்பேசி இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் வாக்குவங்கி உள்ளது.

காங்கிரசை பொறுத்த வரை இந்தியா முழுவதும் வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ஒரு சில தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் வாக்கு வங்கி உள்ளது.

தி.மு.க.வும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தான் இப்போது மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. காங்கிரசும் பல தோல்விகளை சந்தித்து தான் தமிழகத்தில் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த தேர்தலை பொறுத்த வரை அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாங்கள் யாரையும் பல்லக்கு  தூக்க சொல்லவில்லை. சூழ்நிலையை பொறுத்து தான் கூட்டணி அமைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News