செய்திகள்
குழந்தையுடன் பெற்றோர்.

குறைபிரசவத்தில் எடை குறைவாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் சிகிச்சைக்கு உதவ தந்தை வேண்டுகோள்

Published On 2019-06-22 05:40 GMT   |   Update On 2019-06-22 05:40 GMT
கோவையில் குறைபிரசவத்தில் எடை குறைவாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் சிகிச்சைக்கு நல்ல மனம் படைத்தவர்கள் உதவ வேண்டும் என்று தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை:

கோவை வெள்ளக்கிணறு அருகே உள்ள வன்னிநகர் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி (வயது 33). கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர். இவரது மனைவி செல்வராணி (31). இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கடந்த வருடம் செல்வராணி கர்ப்பமானார். டாக்டர்கள் அவரை பரிசோனை செய்த போது இரட்டை குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து செல்வராணி டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்று வந்தார்.

கர்ப்பமாகி 24 வாரமே ஆன நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி செல்வராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

25-ந் தேதி செல்வராணிக்கு குறை பிரசவத்தில் 2 ஆண்குழந்தைகள் சுக பிரசவத்தில் பிறந்தது. குறைபிரசவத்தில் பிறந்ததால் முதல் குழந்தை 660 கிராமும், 2-வது குழந்தை 640 கிராமும் இருந்தது.

எடை குறைவாக இருந்ததால் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். இதனையடுத்து டாக்டர்கள் பச்சிளம் குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் (என்.ஐ.சி.யு) சேர்த்தனர். தொடர்ந்து 59 நாட்களாக குழந்தைகளை வெண்டிலேட்டரில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் குழந்தைகளின் தந்தை பெருமாள்சாமி குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் உதவி கேட்டு சமூக வலைதலங்களில் பகிர்ந்துள்ளார்.

கர்ப்பமாக இருந்த எனது மனைவிக்கு கடந்த ஏப்ரல் 25-ந் தேதி 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. 24 வாரங்களில் குழந்தைகள் பிறந்ததால் எடை குறைவாகவும், சுவாச கோளாறு காரணமாகவும் இருந்தனர். இதனையடுத்து 2 குழந்தைகளையும் டாக்டர்கள் என்.ஐ.சி.யு.வில் சேர்த்தனர். கடந்த 59 நாட்களாக குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுவரை குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் வரை மருத்துவ செலவு ஆகிஉள்ளது. குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் எனது குடும்பத்தின் நிலையை கண்டு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ரூ. 6 லட்சம் வரை வசூல் செய்து குழந்தையின் மருத்துவ செலவுக்கு கொடுத்தார். தற்போது குழந்தைகளின் உடல் நிலை மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. தொடர்ந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மருத்துவ செலவுக்கு இன்னும் ரூ. 6 லட்சம் வரை தேவைப்படுகிறது. எனவே நல்ல மனம் படைத்தவர்கள் எனது குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News