செய்திகள்

திருமணம் செய்வதாக 9 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது - பரபரப்பு தகவல்

Published On 2019-06-22 02:05 GMT   |   Update On 2019-06-22 05:18 GMT
திருமணம் செய்வதாக கூறி 9 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களிடம் ரூ.9 கோடியை சுருட்டி அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி (வயது 34). இவர், பெயருக்கு ஏற்றாற் போல பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி சுகபோகத்தில் மூழ்கி சக்ரவர்த்தியாகவே வாழ்ந்துள்ளார். 35 வயதை தாண்டி திருமணத்துக்கு ஏங்கி நிற்கும் பெண்கள், இள வயதிலேயே கணவனை இழந்து அடுத்த வாழ்க்கையை தேடும் பெண்கள் போன்றவர்களை திருமண இணையதளம் வழியாக தேடிப்பிடித்து இவர், காம களியாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இந்த காம களியாட்டத்தை நடத்தி வந்துள்ளார். இவரது வலையில் 9 பெண்கள் சிக்கியதோடு, தங்களிடம் இருந்த செல்வத்தையும் இவருக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கும்பகோணம் ஆகிய நகரங்களை சேர்ந்த 9 பெண்கள் இவரது காம வலையில் சிக்கியிருக்கிறார்கள்.

இவரிடம் சிக்கிய பெண்களில் 2 பேர் டாக்டர்கள் ஆவார்கள். 4 பேர் என்ஜினீயர்கள். ஒருவர் பிசியோதெரபி டாக்டர். இன்னும் இருவர் பட்டதாரிகள் ஆவார்கள். இவரிடம் சிக்கிய பெண்கள் 9 பேரும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள். கை நிறைய சம்பாதிப்பவர்கள்.

9 பெண்களை தனது வலையில் வீழ்த்திய சக்ரவர்த்தியும் எம்.இ. (சிவில் என்ஜினீயரிங்) பட்டதாரி ஆவார். இவர், தன்னை காண்டிராக்டர் என்று இணையதளத்தில் அறிமுகப்படுத்தி வலம் வந்துள்ளார். 9 பெண்களை ஏமாற்றினாலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏமாந்த பெண்களில் ஒருவரை முறையாக திருமணம் செய்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரது மோசடி லீலைகளை தெரிந்துகொண்டு அந்த பெண் தனது குழந்தையுடன் இவரை உதறி தள்ளிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் இவருக்கு இன்னும் வசதியாகி போனது. இவர் ஏற்கனவே மதுரையில் 2 பெண்கள் கொடுத்த புகாரில் கைதாகி மதுரை சிறையில் சில காலம் இருந்துள்ளார். அடுத்து திருச்சி லால்குடியை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் உள்பட 2 பெண்களின் புகாரின்பேரில் கைதாகி திருச்சி ஜெயிலிலும் சிறைவாசம் இருந்துள்ளார்.

தற்போது கடைசியாக இவர் விரித்த வலையில் சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த பெண் டாக்டர் விழுந்துள்ளார். அவருக்கு 38 வயதாகிறது. சற்று குண்டாக இருப்பார். இதனால் இவருக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுகிறார். இவர் திருமணத்துக்கு ஏங்குவதை இணையதளம் வாயிலாக தெரிந்துகொண்ட சக்ரவர்த்தி, இவரை தொடர்புகொண்டார்.

‘உன்னை ராணி போல வைத்து காப்பாற்றுகிறேன்’, என்று ஆசைவார்த்தை காட்டினார். நல்ல பிள்ளையாக வீட்டுக்கே சென்று அவரது பெற்றோர் முன்னிலையில் பெண் பார்த்தார். ‘குண்டு பெண்ணை தான் எனக்கு பிடிக்கும்’, என்று கதை விட்டார். திருமணம் நடக்கவில்லையே... என்று ஏக்கத்துடன் இருந்த குண்டு பெண் டாக்டர், சக்ரவர்த்தியின் மயக்கும் பேச்சில் மனதை பறிகொடுத்தார். தாலி கட்டும் முன்பே கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து சக்ரவர்த்தியுடன் முதலிரவையும் கொண்டாடினார்.

தன்னிடம் இருந்த ரூ.7 கோடி பணத்தையும் வள்ளலாக வாரி வழங்கினார், அந்த பெண் டாக்டர். அந்த பெண் டாக்டர் கொடுத்த கோடிகளை பயன்படுத்தி சக்ரவர்த்தி திருவண்ணாமலையில் 3 மாடிகளை கொண்ட பிரமாண்ட வீடு ஒன்றை கட்டினார். சென்னையிலும் 3 வீடுகள் வாங்கினார். 3 சொகுசு கார்களுக்கும் சொந்தக்காரர் ஆனார். சக்ரவர்த்தி மீதான மயக்கத்தில் அத்தனை சொத்துகளையும் அவர் பெயருக்கே பெண் டாக்டர் எழுதிகொடுத்ததாக தெரிகிறது.

பணமும் கிடைத்தது, சுகமும் கிடைத்தது; இனிமேல் போதும் என்று அந்த பெண் டாக்டரை கழற்றிவிட்ட சக்ரவர்த்தி, கும்பகோணத்தில் ஒரு பெண் என்ஜினீயரை வலை வீசி பிடித்தார். அந்த பெண் என்ஜினீயரையும் திருமணம் செய்வதாக கூறி ரூ.1.30 கோடி பணத்தை சுருட்டினார். மொத்தம் 9 பெண்களிடமும் ரூ.9 கோடியை சுருட்டி உல்லாச சக்ரவர்த்தியாக வலம் வந்தார்.

இந்தநிலையில் சென்னை பெண் டாக்டர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மோசடி ராஜா சக்ரவர்த்தி மீது புகார் கொடுத்தார். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன், சக்ரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். திருச்சி சிறையில் இருந்த சக்ரவர்த்தியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டு அனுமதியுடன் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பெண்களிடம் திருமண ஆசைகாட்டி அபகரித்த பணத்தில் சக்ரவர்த்தி வாங்கிப்போட்ட சொத்துகள் தற்போது ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. கும்பகோணம் பெண் என்ஜினீயர் தான் ஏமாந்த பணத்துக்காக இந்த சொத்துகளின் பத்திரங்களை எல்லாம் சக்ரவர்த்தியிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றுவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

அந்த பத்திரங்களை வாங்கி கோர்ட்டு மூலம் சக்ரவர்த்தி வாங்கி குவித்துள்ள மோசடி சொத்துகளை எல்லாம் முறையாக முடக்கிட மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மோசடி மன்னன் சக்ரவர்த்தி நேற்று இரவு மீண்டும் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டார். இதுபோல் பெண்களிடம் மோசடி செய்யும் திட்டம் உருவானது எப்படி? என்று சக்ரவர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எம்.இ. என்ஜினீயரிங் முடித்துவிட்டு கட்டிடம் கட்டி விற்கும் தொழிலை செய்ய நான் விரும்பினேன். ஆனால் அதற்கு என்னிடம் போதிய பண வசதியில்லை. எனது உடன்பிறந்த சகோதரிகள் இருவரும் ஏழ்மையில் இருந்தனர். திருவண்ணாமலையில் இருந்த ஒரே ஒரு சொத்தை விற்று நான் என்ஜினீயரிங் படித்தேன். சென்னை குரோம்பேட்டையில் நான் தங்கியிருந்தபோது அரசு அதிகாரி ஒருவர் தான் இணையதளம் வாயிலாக பெண்களை பார்த்து மோசடி செய்யும் திட்டத்தை எனக்கு வகுத்து கொடுத்தார்.

அவர் தான் எனக்கு இந்த தொழிலில் குரு. அவர் சொன்ன ஆலோசனைப்படி மதுரையில் 2 பெண் என்ஜினீயர்களை ஏமாற்றினேன். ஒருவரிடம் ரூ.30 லட்சமும், இன்னொருவரிடம் ரூ.70 லட்சமும் சுருட்டினேன். பின்னர் அதுவே எனக்கு தொழிலாகி போனது.

என்னிடம் ஏமாந்தவர்களில் 4 பெண்கள் மட்டுமே போலீசில் புகார் கொடுத்தனர். மற்றவர்கள் எல்லாம் திருமணம் செய்துகொண்டு நல்லபடியாக வாழ்கிறார்கள். அவர்கள் என்மீது புகார் கொடுக்கவில்லை. இந்த வழக்குகளில் இருந்து விடுபட்டு வந்தவுடன் எனது மனைவியை சந்தித்து மீண்டும் புது வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News