செய்திகள்

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்

Published On 2019-06-21 10:24 GMT   |   Update On 2019-06-21 10:24 GMT
சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
சென்னை:

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை போல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற வாலிபர் கடந்த 14 ந்தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோட்டை சேர்ந்த தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தையல்கள் போடப்பட்ட நிலையில் தேன்மொழி கிசிச்சை பெற்று வந்தார். 10 நாட்கள் வரையில் பேசக் கூடாது என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தி இருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தேன்மொழி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தேன்மொழியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் சுரேந்தர் ரெயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சுயநினைவு இல்லாமல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தேன்மொழியை, சுரேந்தர் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பதை போலீசாரால் முழுமையாக அறிந்து கொள்ள முடிய வில்லை.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags:    

Similar News