செய்திகள்

தேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published On 2019-06-21 08:24 GMT   |   Update On 2019-06-21 08:24 GMT
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் செய்த சதியால் தான் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீ வல்லபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து அழகிரி பேசியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து அதன் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். கூட்டணியே வெற்றிக்கு காரணம்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. நாம் எங்கே விழுந்து கிடக்கிறோம் அதற்கு என்ன காரணங்கள் என்பது பற்றி உங்களிடம் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை வரும் போது பத்து அல்லது இருபது மாவட்டத் தலைவர்களை மாற்றுவார்கள். இது கடந்த காலங்களில் வரலாறு. ஆனால் நான் புதிய மாவட்ட தலைவர்களுக்கு மூன்று விதமான தேர்வு வைப்பேன். அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நீடிக்க முடியும். மற்றவர்கள் விலகிக் கொள்ளலாம்.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அவரவர் மாவட்டங்களில் 100 சதவீதம் காங்கிரசார் போட்டியிட ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிட்டால் தான் நமக்கு மரியாதை. வெற்றிக்கு கூட்டணியை நம்பியிருக்கக் கூடாது.


ஆனால் நாம் தான் உழைக்க வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்று இருக்கிறது. அதுவும் தேர்தல் ஆணையம் செய்த சதியால், குழப்பத்தால் தான் இந்த தோல்வி. வேறு எந்த காரணமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் நீடிக்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் தலைவர் தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே. ஆர்.ராமசாமி, ராஜேஷ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், சிவ ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், மாநில நிர்வாகிகள் தாமோதரன், அஸ்லம் பாட்ஷா, பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஜான்சிராணி, கோபண்ணா, சிரஞ்சீவி, செல்வப்பெருந்தகை, நவீன் ரஞ்சன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News