தென்காசி அருகே கிணற்றில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி அருகே தொழிலாளி மர்ம மரணம்
பதிவு: ஜூன் 20, 2019 18:51
தென்காசி:
தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் முத்தையா மகன் முருகேசன் (வயது45). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி மறுநாள் (18-ந்தேதி) தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கிணற்றில் பிணமாக கிடந்தவர் காணாமல் போன முருகேசன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.