செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 60 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

Published On 2019-06-20 09:00 GMT   |   Update On 2019-06-20 09:00 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட 60.27 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக ரூ. 22 லட்சம் வசூலிக்கப்பட்டது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம் மற்றும் புழல் ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளில் கூடுதலாக நீரை சேமித்து வைக்க ஏதுவாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

திருத்தணி அருகே பாறை பூமியாக இருப்பதால் 500 அடிக்கும் மேல் தான் தண்ணீர் கிடைக்கிறது. அதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக தனியார் அமைப்பின் மூலம் அதற்கான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டதின் பேரில் அதற்கான கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது

அடுத்த ஆண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தி நிலத்தடி நீர் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தில் இதுவரை அரசால் தடை செய்யப்பட்ட 60.27 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக ரூ. 22 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகளும் பொதுமக்களும் தவிர்க்க வேண்டும்.

மேலும், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன்சாவடி, வானகரம், சென்னீர்குப்பம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் சேதம் அடைந்த சாலையை சீர்செய்ய ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு காங்கீரிட் சாலை அமைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News