செய்திகள்

பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரித்த கோவை வாலிபர்கள்- திடுக்கிடும் தகவல்கள்

Published On 2019-06-19 09:50 GMT   |   Update On 2019-06-19 09:50 GMT
கோவையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் உறுப்பினர்கள் இரண்டு பேர், இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தியாகிகள் போன்று சித்தரித்தது தெரியவந்துள்ளது.
கோவை:

கொச்சியில் இருந்து கடந்த 12-ந்தேதி வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் உள்ள முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா உள்ளிட்ட 7 பேர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

முகமது அசாருதீனின் டிராவல்ஸ் அலுவலகத்தில் இருந்து 14 செல்போன்கள், சிம்கார்டுகள், 300 தோட்டாக்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவு நோட்டீசுகள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மேலும் ஷேக் இதயதுல்லா கேரளாவில் கைதான ஐ.எஸ். பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முகமது அசாருதீன், ஷேக் இதயதுல்லா ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் முகமது அசாருதீன் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்கள் மூலம் தமிழகம், கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக முகமது அசாருதீன், ஷேக் இதயதுல்லா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோவை மாநகர போலீசார் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான், வின்சென்ட் ரோட்டை சேர்ந்த முகமது உசேன், கரும்பு கடையை சேர்ந்த ஷேக் சபிபுல்லா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் இவர்கள் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.

இவர்கள் இலங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் பலரை கொன்ற ஜாக்ரன் ஹாசீம் மற்றும் அவனது கூட்டாளிகளின் தியாகம் பெரியது என்று பெருமையாக பேசியுள்ளனர். மேலும் கத்தியால் கொலை செய்வது எப்படி, டிரக் போன்ற வாகனங்கள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது போன்றவற்றை விளக்கும் படங்களை வைத்து ரகசியமாக பேசி வந்துள்ளனர்.

இந்த படங்களை வெளிநாட்டில் உள்ள சில நபர்கள் மூலம் பெற்றது தெரியவந்தது. வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் போன்று கோவையில் தற்கொலை படை தாக்குதல் மூலம் அசம்பாவித சம்பவங்களை நடத்த சதி திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தகவல்களை தமிழில் மொழி பெயர்ப்பும் செய்துள்ளனர். கோவையில் இவர்களின் பலத்தை காட்டும் வகையில் கோவில்கள், சர்ச்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தகவல் கிடைத்தது.

கோவையில் அடுத்தடுத்து ஐ.எஸ். ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதால் உளவுதுறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News