செய்திகள்
ஈரோட்டில் குழாய் உடைந்து வெளியேறும் குடிநீர்.

தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் ஆறுபோல் வீணாக ஓடிய குடிநீர்

Published On 2019-06-19 03:13 GMT   |   Update On 2019-06-19 03:13 GMT
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ள நிலையில் ஈரோட்டில் ஆறுபோல் குடிநீர் வீணாக ஓடியது.
ஈரோடு:

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் தண்ணீர் பஞ்சம் உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடும் சமயத்தில், ஈரோட்டில் கனமழை பெய்ததுபோல நேற்று மாலை தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கணம் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், குடிநீர்தான் சாலையில் வீணாக செல்கிறது என்பதை தெரிந்துகொண்டதும் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.

ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அருகில் செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து குடிநீர் ‘குபுகுபுவென’ வெளியேறியது. தொடர்ந்து அதிக வேகத்தில் தண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் சாலையில் மழைவெள்ளத்தைபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து குடிநீர் வீணாகியதால் ஈரோடு சுவஸ்திக் கார்னர் வரை தண்ணீர் வந்தது.

அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “ஈரோடு மாநகரில் பல இடங்களில் சிறிதாக ஏற்படும் குழாய் உடைப்பின் மூலமாக பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா நுழைவு வாயில் அருகில் வீரபத்திர வீதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய வேண்டுமென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அங்கு தினமும் குடிநீர் வீணாக சென்றுகொண்டே இருக்கிறது. இந்தநிலையில் பெரிய குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலையில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே குடிநீர் வினியோகத்தில் மாநகராட்சி அதிகாரிகள் தனிகவனம் செலுத்தி தண்ணீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

Tags:    

Similar News