செய்திகள்

1,092 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

Published On 2019-06-19 03:05 GMT   |   Update On 2019-06-19 03:05 GMT
சென்னை பகுதியில் 1,734 கடைகளில் தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் 1,092.45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 832 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்காக ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தனிப்படை அதிகாரிகள் நேற்றும் பிளாஸ்டிக் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1,734 கடைகளில் தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் 1,092.45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த 130 பேருக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News