செய்திகள்

புழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

Published On 2019-06-18 13:48 GMT   |   Update On 2019-06-18 13:48 GMT
இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்கும் வகையில், புழல் சிறையில் உள்ள கைதிகள் சிலரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
சென்னை:

இலங்கையில் கடந்த ஏப்ரலில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த 12-ம் தேதி கேரளாவின் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. கடந்த 13-ம் தேதி கோவையை சேர்ந்த ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, கோவையை தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோரிடம் 5 மணி நேரமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்தனர்.
Tags:    

Similar News