செய்திகள்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

Published On 2019-06-18 10:52 GMT   |   Update On 2019-06-18 10:52 GMT
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழு சம்பளம் மற்றும் நிலுவை தொகையை 2 ஆண்டுகளாகியும் முழுமையாக வழங்கவில்லை. இதை கண்டித்து மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் சிவாஜி முன்னிலை வகித்தனர்.

அப்போது மாவட்ட தலைவர் சந்தானம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 7-வது ஊதியக்குழு சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி உதவி இயக்குநர், ஊராட்சிகள் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தும் முழுமையாக வழங்கப்படாத நிலையில், 2018-ம்ஆண்டு நான்கு முறை போராட்டங்கள் நடத்திய பிறகும் மாவட்டத்தில் 11 ஊராட்சிகளில் குறிப்பிட்ட சில ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்புல்லாணி, கடலாடி, பரமக்குடி, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை நேரில் சந்தித்து பேசியும் இது நாள் வரை முறையாக புதிய சம்பளமும், நிலுவைத் தொகையும் வழங்காத காரணத்தால் கலெக்டர் ஜூன் மாத இறுதிக்குள் 7-வது ஊதியக்குழு சம்பளம் மற்றும் நிலுவைத் தொகையை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க வேண்டும் என்றார்.

பின்னர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு 5-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் வீரராகவராவிடம் அளித்தனர்.
Tags:    

Similar News