செய்திகள்

பிளாஸ்டிக் தடை - சென்னை பகுதியில் 1,831 கடைகளில் சோதனை

Published On 2019-06-18 06:22 GMT   |   Update On 2019-06-18 06:22 GMT
சென்னை பகுதியில் 1,831 கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் பூட்டி சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை:

ஜனவரி 1-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பின்னர் தளர்ந்து விட்டதாக கூறப்பட்டது. 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் இது தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 153 பகுதிகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 1,831 கடைகளில் அதிரடி சோதனை நடந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பிளாஸ்டிக் குடோன் பூட்டி சீல் வைக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள 234 கடைகளில் 24 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெருங்குடி மண்டலத்தில் 77 கடைகளில் நடந்த சோதனையின்போது 21 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.39 ஆயிரத்து 100 அபராதம் பெறப்பட்டது.

மாதவரத்தில் 68 கடைகளில் நடந்த சோதனையில் 15 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.29 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை ரூ. 2 லட்சத்து 13 ஆயிரம் அபராதமாக பெறப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் இதுவரை சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 250 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முதல் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்களுக்கு ரு.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பயன்படுத்துவோருக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News