செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1.94 லட்சம் பேர் பயன்

Published On 2019-06-17 18:28 GMT   |   Update On 2019-06-17 18:28 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் பயன் அடைந்து இருப்பதாக மண்டல திட்ட மேலாளர் குமரன் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் பயன் அடைந்து இருப்பதாக மண்டல திட்ட மேலாளர் குமரன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுப்படுத்தப்பட்டது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த வாகனம் பொதுமக்கள் அழைத்த 12 நிமிடத்திற்குள் நகர்ப்புறங்களிலும், 16 நிமிடத்தில் கிராமப்புறங்களிலும் சம்பவ இடத்தை சென்றடைகின்றன.

108 ஆம்புலன்சில் வாகனத்தின் உள்ளேயே முதல் உதவி செய்வதற்கு வசதியாக அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதால், நோயாளி சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார்.

மாவட்டத்தில் தற்போது 23 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 94 ஆயிரத்து 85 பேர் இந்த சேவை மூலம் பயன் அடைந்து உள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டும் 45 ஆயிரத்து 963 பேர் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் 34 ஆயிரத்து 740 பேர் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News