செய்திகள்

குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை

Published On 2019-06-17 18:21 GMT   |   Update On 2019-06-17 18:21 GMT
திருப்பூர் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட குழு கூட்டம் உடுமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாநில குழுஉறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப் புறங்களில் குடிநீர் பிரச்சினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பல பகுதிகளில் வாரம் ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் வினியோகம் நடைபெறுவது கடினமாக உள்ளது. சில பகுதிகளில் மாதம் ஒருமுறை மட்டும் குடிநீர் கிடைக்கும் வகையில் உள்ளது.

எனவே அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பழுதடைந்து உள்ள மோட்டார்களை பழுது நீக்கி, குடிநீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் விரைந்து செயல்பட வேண்டும். மாநகரில் கடந்த ஆண்டு வீடுகள், வணிக வளாக கட்டிடங்களுக்கு சொத்து வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகங்கள் இல்லாத நிலையில் பல பணிகள் நடைபெறாமலே இருந்து வருகிறது. இதனால் உடனடியாக தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News