செய்திகள்

மதுரை-ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டம்

Published On 2019-06-17 09:30 GMT   |   Update On 2019-06-17 09:30 GMT
ராமநாதபுரம், மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்:

மேற்கு வங்காள மாநிலத்தில் 2 பயிற்சி டாக்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. மருத்துவமனைக்கு வந்த டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய ஆபரே‌ஷன்கள் தவிர மற்ற அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் வழக்கம்போல பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர 2350 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரையில் அரசினர் ராஜாஜி ஆஸ்பத்திரி, புதிய ஜி.எச்., மல்டி ஸ்பெஷாலிட்டி ஆகிய 3 பிரமாண்ட அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இங்கு டாக்டர்கள், மருத்துவ பேராசிரியர்கள், நர்சுகள், ஆய்வக உதவியாளர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்தவித பாதிப்பும் இல்லை.

மருத்துவமனை நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ட மேற்படிப்பு பயிற்சி டாக்டர்களின் உதவியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து வேலைக்கு வந்தனர்.

டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. இன்று சிகிச்சை பெற வந்த வெளி நோயாளிகளுக்கும், உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதே போல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் பணியாற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு மட்டுமே இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை முற்றிலும் தடைபட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை காலை 6 மணி வரை நீடிக்கும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News