செய்திகள்

சென்னையில் தினமும் 900 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது - எஸ்.பி.வேலுமணி

Published On 2019-06-16 06:48 GMT   |   Update On 2019-06-16 06:48 GMT
சென்னையில் தினமும் 900 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை:

தமிழ்நாட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 142 வருடங்களில் இல்லாத வகையில் 2017-ம் ஆண்டு வரலாறு காணாத வறட்சி நிலவியது. அப்போதும் குடிநீர் பிரச்சினையை சமாளித்தோம். தமிழகத்தில் தற்போது 62 சதவீதம் மழைகுறைவு. நிலத்தடி நீரும் வெகுவாக குறைந்துள்ளது.

சென்னை நகரின் தற்போதைய மக்கள்தொகை 74.38 லட்சம் ஆகும். 2016 டிசம்பர் மாதம்வரை நாள் ஒன்றுக்கு 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. நீர் பெறப்பட வேண்டும்.

ஆனால் 2018-19-ம் ஆண்டில், பெறப்பட்ட நீரின் அளவு 1.98 டி.எம்.சி. மட்டுமே ஆகும். கண்டலேறு நீர்த் தேக்கத்தில் 6.40 டி.எம்.சி.க்கு மேல் இருந்தால் மட்டுமே சென்னைக்கு ஆந்திர அரசு குடிநீர் வழங்கும். தற்போதுள்ள நீரின் அளவு 4.58 டி.எம்.சி. மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் ஆந்திர அரசால் குடிநீர் வழங்க இயலவில்லை.

இந்த ஆண்டு மே மாதம் முதல் சென்னை குடிநீர் வாரியம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது. மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களிலிருந்து நாளொன்றுக்கு தலா 90 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்த போதிலும் தற்போதுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், வீராணம் திட்டம், நெய்வேலி நீர் படுகையிலிருந்து கூடுதலாக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், விவசாய கிணறுகளை வாடகைக்கு எடுத்தல், சிக்கராயபுரம் கல்குவாரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயக் கிணறுகள் மூலம் 95 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது தினமும் 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. எருமையூர் கல்குவாரியிலிருந்து ரூ.19.17 கோடி மதிப்பீட்டில் ஜூலை மாதம் முதல் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரட்டைஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க ரூ.53 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 900 லாரிகள் வாடகைக்கு அமர்த்தி நாளொன்றுக்கு சராசரியாக 9100 லாரி நடைகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

புறநகர் பகுதிகளில் கல்குவாரிகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து, பம்மல், அனகாபுத்தூர், சிட்லப்பாக்கம் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

போரூர் பகுதியில் அமையவுள்ள 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை வடிவமைத்து, 20 வருடங்கள் இயக்கி பராமரிக்கும் பணிக்காக திட்ட மேலாண்மை மற்றும் கட்டுமான பணிகளை கண்காணித்தல் ஆகிய பணிகளுக்காக ஆட்களை தேர்வு செய்யும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

குடிநீர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றன. சென்னையில் பலர் வீடுகளை காலி செய்துவிட்டு செல்வதாகவும் தகவல்களை பரப்புகிறார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News