செய்திகள்

வாகனத்தில் அடிபட்டு இறந்த குட்டியுடன் பாசப்போராட்டம் நடத்திய தாய் குரங்கு

Published On 2019-06-15 18:27 GMT   |   Update On 2019-06-15 18:27 GMT
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனத்தில் அடிபட்டு இறந்த குட்டியுடன் தாய் குரங்கு பாசப்போராட்டம் நடத்தியது.
குன்னூர்:

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் குரங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் உணவு பொருட்களை வீசி செல்கின்றனர். இந்த உணவு பொருட்களை தின்பதற்காக குரங்குகள் கூட்டம், கூட்டமாக சாலையோரத்துக்கு படையெடுக்கின்றன. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. எனவே சாலையில் உணவு பொருட்களை வீசக்கூடாது என்று சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு கொள்வது இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். அருகில் உணவு தேடி சாலைக்கு வந்த குரங்கு குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. சிறிது நேரத்தில் அங்கு வந்த தாய் குரங்கு, தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் உடலை தூக்கி கொண்டு சாலையோரத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்து கொண்டு, குட்டியின் உடலை கட்டியணைத்தபடி பாசப்போராட்டம் நடத்தி கொண்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு கண் கலங்கினர். இதையடுத்து அந்த தாய் குரங்கு தனது குட்டியின் உடலை தூக்கிக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது.
Tags:    

Similar News