செய்திகள்

தமிழகத்தில் 12 கோட்டைகளை சீரமைத்து சுற்றுலா தலமாக்கப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்

Published On 2019-06-15 09:18 GMT   |   Update On 2019-06-15 09:18 GMT
தமிழகத்தில் 12 கோட்டைகளை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில், தமிழ்நாட்டின் 22-வது மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த இடத்தை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் தமிழகத்தின் 22-வது மாவட்ட அரசு அருங்காட்சியகம் மலர இருக்கிறது. கலெக்டரின் முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்த இந்த இடத்தில் 23,000 சதுர அடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இந்த வருடம் தேனி மற்றும் திருவண்ணாமலையில் மாவட்ட தலைமையிடத்தில் அரசு அருங்காட்சியகம் வரப்போகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் 7 விதமான வரலாறுகளை காட்சி படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக வரலாறு, பொருளாதார வரலாறு, அரசியல் வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு உட்பட 7 வரலாறுகள் இடம் பெறுகிறது.

இந்த வருடம் பள்ளிக்கல்வியில் அனைத்து பள்ளி மாணவர்களையும் அருகில் உள்ள அருங்காட்சியகம் அழைத்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அந்த அருங்காட்சியத்தில் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விசயங்களை பொருளாதார ஆய்வகம் மாதிரி வினாடிவினா நடத்தி எந்த அளவிற்கு மாணவர்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள் என தேர்வு வைக்கப்படும்.

அதேபோல் இந்த அருங்காட்சியகத்தில் சரித்திர பிரசித்த பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தின் அகழ்வாய்வு இடங்கள் மற்றும் புராதான சின்னங்கள் எடுத்து செல்வதற்கும் பார்த்துக் கொண்டிக்கிறோம்.

அருகாமையில் உள்ள செஞ்சி கோட்டையில் மத்திய அரசின் தொல்லியல் துறை மூலமாக ரூ.10 கோடிக்கு சீர்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 12 கோட்டைகளை எடுத்திருக்கிறோம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட கீழ் இருந்து மேல் இருக்கிற பல கோட்டைகள் எடுத்து சீரமைக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

எதிரொலி அருங்காட்சியகம் ரூ.136 கோடியில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியமாக உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடம் தொல்லியல் மற்றும் அருங்காட்சியங்கள் துறைக்கு பொற்காலமாக இருக்கும். பட்டறைபெரும்புதூர், ஈரோடு கொடுமணல், கீழடி என ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் அகழாய்வு நடைபெறுவது தமிழகம் மட்டும் அல்ல எந்த ஒரு மாநிலத்திற்கும் புதுமையான விசயமாகும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது அமைச்சர் சேவூர் ரமச்சந்திரன் உடனிருந்தார்.
Tags:    

Similar News