செய்திகள்
ரவுடி வல்லரசு

போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை - போலீஸ்காரரை தாக்கியதால் அதிரடி நடவடிக்கை

Published On 2019-06-15 01:26 GMT   |   Update On 2019-06-15 07:26 GMT
சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மாதவரம்:

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்த ரவுடியை இன்று போலீசார் “என்கவுண்டர்” நடத்தி சுட்டுக் கொன்றனர்.

வழக்கு விசாரணைக்காக பிடிக்கச் சென்ற போலீஸ்காரர்களை அடுத்தடுத்து அவன் அரிவாளால் வெட்டியதால், போலீசார் அவனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி தேசிங்குநாதன் நகரைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் வல்லரசு (வயது20). பிரபல ரவுடியான இவன் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வந்தான்.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து உள்பட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக இவனிடம் விசாரணை நடத்த ஓட்டேரி, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், கொடுங்கையூர் ஆகிய காவல் நிலைய போலீசார் தேடி வந்தனர்.

நேற்றிரவு ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகளுடன் வியாசர்பாடி எம்.எம்.கார்டன் பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வியாசர்பாடி காவல் நிலைய போலீஸ்காரர்கள் பவுன்ராஜ், ரமேஷ் இருவரும் நேற்றிரவு 11 மணிக்கு எம்.எம்.கார்டன் பகுதிக்கு சென்றனர். வல்லரசுவை சுற்றி வளைத்த போலீஸ்காரர்கள், அவனை வியாசர்பாடி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்.

அப்போது போலீஸ்காரர்களுக்கும், ரவுடி வல்லரசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ரவுடி வல்லரசு, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீஸ்காரர் பவுன்ராஜை குறி வைத்து அரிவாளால் வெட்டினான். தலையில் ஆழமான அரிவாள் வெட்டு விழுந்ததால் போலீஸ்காரர் பவுன்ராஜ் ரத்த வெள்ளத்தில் அலறியபடி அந்த இடத்திலேயே சரிந்தார்.

மற்றொரு போலீஸ்காரர் ரமேஷ் அவரை காப்பாற்ற ஓடினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவுடி வல்லரசுவும் அவனது கூட்டாளிகளும் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த பவுன்ராஜை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக போலீஸ்காரர் பவுன்ராஜ் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையே போலீஸ்காரர் ரமேஷ் நடந்த சம்பவம் பற்றி வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு வந்து தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரவுடி வல்லரசை யும் அவனது கூட்டாளிகளையும் பிடிப்பதற்கு வியூகம் வகுக்கப்பட்டது. புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலும் மகாகவி பாரதிநகர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் தலைமையிலும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகள் கதிர் என்ற கதிரேசன், கார்த்திக் ஆகிய இருவரும் மாதவரம் பகுதியில் சுற்றி திரிவது தெரிய வந்தது. இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர்கள் மூவரும் மாதவரம் புதிய பஸ் நிலையம் பின்புற பகுதியில் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சரண் அடைந்து விடும்படி ரவுடிகளிடம் போலீசார் எச்சரித்தனர். ஆனால் ரவுடி வல்லரசு அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடுவதில் தீவிரமாக இருந்தான். அவனை தப்ப விடாமல் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் சுற்றி வளைத்தனர்.

ரவுடி வல்லரசு தனது கையில் பெரிய பட்டா கத்தி அரிவாள் வைத்திருந்தான். அவனது கூட்டாளிகள் கதிரேசன், கார்த்திக்கும் பெரிய அரிவாள் வைத்திருந்தனர். அவர்களை எச்சரித்தபடி போலீசார் பிடிக்க நெருங்கினார்கள்.

அப்போது ரவுடி வல்லரசு திடீரென போலீசார் மீது தாக்குதல் நடத்தினான். அவன் அரிவாளால் வெட்டியதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், தீபன் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அதன் பிறகும் ரவுடி வல்லரசு தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டான்.

இதைக் கண்ட இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஜார்ஜ் மில்லர் தங்களை தற்காத்துக் கொள்ள “என்கவுண்டர்” மேற்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் தங்களது கைத்துப்பாக்கியால் 3 தடவை சுட்டனர். அதில் ஒரு குண்டு வல்லரசுவின் காலில் பாய்ந்தது.

அடுத்த இரு குண்டுகளும் வல்லரசுவின் மார்பை துளைத்தன. ரத்த வெள்ளத் தில் சரிந்த அவனை போலீ சார் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வல் லரசுவின் உயிர் பிரிந்தது.

அவன் இறந்து விட்டதை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே என் கவுண்டர் பரபரப்பை பயன்படுத்தி ரவுடி வல்லரசுவின் கூட்டாளி கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். மற்றொரு கூட்டாளி கதிரேசன் பிடிபட்டான். அவனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கதிரேசன் மீதும் சோழவரம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய கார்த்திக் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

என்கவுண்டர் நடத்தப்பட்டதை அறிந்ததும் வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன், புளியந்தோப்பு கமி‌ஷனர் சாய் சரண், உதவிக் கமி‌ஷனர் அழகேசன் ஆகியோர் மாதவரம் புதிய பஸ் நிலையம் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலையில் பலத்த வெட்டு காயம்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போலீஸ்காரர் பவுன்ராஜ் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன், கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் தினகரன் பார்த்து ஆறுதல் கூறினார்கள். சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
Tags:    

Similar News