செய்திகள்

தமிழ் மொழியை பாதுகாப்பதில் பா.ஜ.க அக்கறையோடு செயல்படுகிறது - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-06-14 21:54 GMT   |   Update On 2019-06-14 21:54 GMT
இந்தியை திணிக்கிறது என்று குற்றம் சாட்டுவது சரியல்ல எனவும் தமிழ் மொழியை பாதுகாப்பதில் பா.ஜ.க அக்கறையோடு செயல்படுகிறது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த மே மாதம் 17-ந் தேதி் தென்னக ரெயில்வேயிலிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சிக்னலில் உள்ள ரெயில்வே வழிகாட்டுதல் பலகை ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்க வேண்டும் என்பதே. இது ஏன் என்று விளக்கம் கேட்டபோது மதுரைக்கு அருகே மொழி தெரியாததால் 2 ரெயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்து, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பதால் என விளக்கம் அளிக்கப்பட்டது.

எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எனக்கு ரெயில்வே அமைச்சகத்திடமிருந்து, எந்த வகையிலும் இந்தி திணிக்கப்பட மாட்டது என்ற உறுதி தரப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழைய முறையான தமிழில் பரிவர்த்தனையே தொடரும் என்று தெரிவித்தார்கள்.

தமிழ் மொழியையும், தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதிலும் தமிழக பா.ஜ.க அக்கறையோடு செயல்படுகிறது என்பதையும், அதிகாரிகள் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மத்திய அரசே இந்தியை திணிக்கிறது என்று உடனே தமிழக கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News