செய்திகள்

ஒற்றைத்தலைமை சர்ச்சை: ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்

Published On 2019-06-13 12:29 GMT   |   Update On 2019-06-13 12:29 GMT
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஆண்டிப்பட்டியில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.முக. பெரும் சரிவை சந்தித்தது. அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை இல்லாததால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை என்றும், இதன் காரணமாகவே அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்றும் ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்தார். இவருக்கு ஆதரவாக மேலும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதனையடுத்து அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்றும் வருகிற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சி பணியாற்றுமாறும் அறிவுரை கூறி கூட்டம் முடிவுற்றது.

சென்னையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் அருகிலேயே பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்க வேண்டும் என ஒருசிலர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். மேலும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுச் செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

தர்ம யுத்த தொண்டர்கள் என பெயரிட்டு கட்சியையும், ஆட்சியையும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மழை நின்றும் தூவானம் விடாதது போல அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த போதும் இது போல சில சம்பவங்கள் நடைபெற்று வருவது கட்சிக்குள் கோஷ்டிகள் உருவாகி வருகிறது என்பதையே காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியாக இருந்தபோதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடிந்தது. பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. இந்நிலையில் தொண்டர்கள் சிலர் ஒட்டி வரும் போஸ்டர்களால் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

Similar News