செய்திகள்

இதமான சாரல் மழை - முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து

Published On 2019-06-13 10:23 GMT   |   Update On 2019-06-13 10:23 GMT
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கூடலூர் பகுதியில் சாரல் மழை தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல்:

முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் உள்பட 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் நீர்பாசன வசதி பெற்று வருகிறது. கம்பம் பள்ளதாக்கு பகுதியில் முல்லைப் பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலத்தில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை மிகவும் குறைவாகவே பெய்து வருகிறது. ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடிக்கு ஜூன் 1-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இதே போல திண்டுக்கல், மதுரை பகுதி பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஜூன் 1-ம் தேதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தாமதமாக திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை காலம் கடந்து தொடங்கி உள்ளது. கூடலூர், லோயர்கேம்ப், குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் தாக்கமாக தமிழக எல்லைப் பகுதிகளில் சாரல் மழை தொடங்கி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.25 அடி. அணைக்கு 231 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.90 அடி. அணைக்கு நீர் வரத்து, திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 83.31 அடி. நீர் வரத்து இல்லை. 3 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. பெரியாறு அணைப்பகுதியில் 11 மில்லிமீட்டர் மழையும், தேக்கடியில் 3 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News