செய்திகள்

‘நிபா’ வைரஸ் அறிகுறிகளுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கவலைக்கிடம்

Published On 2019-06-13 06:13 GMT   |   Update On 2019-06-13 06:13 GMT
‘நிபா’ வைரஸ் அறிகுறிகளுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

கேரள மாநிலத்தின் எல்லை பகுதிகளையொட்டி உள்ள தமிழகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் ‘நிபா’ வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் மற்றும் புதுவை சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. புதுவை மாநிலத்தின் மாகி பிராந்தியம் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ளது.

இதனால் மாகியில் நிபா வைரஸ் பரவ அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே, புதுவை சுகாதாரத்துறை மாகியில் ‘நிபா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

மாகியில் இருந்து புதுவைக்கு அன்றாடம் அரசு மற்றும் அரசியல் பணிக்காக பலரும் வருவது உண்டு. இதனால் நிபா வைரஸ் புதுவையில் பரவுமோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக ரத்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் புதுவை கோரி மேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளுக்கு நிபா வைரஸ் பரவாமல் இருக்க தனி உடை, கையுறை, முகமூடி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. ‘நிபா’ வார்டுக்குள் மற்றவர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கடலூரை சேர்ந்த 58 வயது நபர் தீவிர காய்ச்சலுடன் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.

இதனால் ஜிப்மர் டாக்டர்கள் அவரை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நோயாளியின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக புனே மத்திய அரசு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி தொழிலாளியான நோயாளி கேரள மாநிலம் குருவாயூரில் பணியாற்றி உள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல் ஏற்படவே கடலூருக்கு திரும்பி உள்ளார்.

ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தற்போது வெண்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

நோயாளிக்கு ‘நிபா’ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான தடுப்பு மருந்து சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் இருப்பதாக ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக்பாத் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News