செய்திகள்

புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட் இலவசமாக வழங்க டீலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

Published On 2019-06-13 02:54 GMT   |   Update On 2019-06-13 02:54 GMT
புதிய இருசக்கர வாகனம் விற்கும்போது 2 ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள், ‘டீலர்’களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 82 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி 2 கோடியே 16 லட்சமாக அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துக்களில் 12,200 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.

இதில் 73 சதவீதம் ஹெல்மெட் அணியாததால் நடந்த உயிரிழப்புகளாகும். 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்று உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துக்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு 7,767-க்கு குறைவாகவும், 2020-ம் ஆண்டு 3,572-ஐ தாண்டக்கூடாது என்றும் இலக்கு நிர்ணயம் செய்து மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் புதிதாக இருசக்கர வாகனங்கள் விற்கும்போது அதன் உற்பத்தியாளர்கள் அல்லது ‘டீலர்’கள் (விற்பனையாளர்கள்) 2 ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து கமிஷனர் சி.சமயமூர்த்தி பிறப்பித்த அந்த உத்தரவில், புதிதாக மோட்டார் சைக்கிள் விற்கும்போது இந்திய தர ஆணையம் பரிந்துரைத்த தரத்திலான ஹெல்மெட்டுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தியாளர்களோடு கலந்து ஆலோசனை செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில் தங்களுடைய லாபம் பாதிக்கப்படும் என்பதால் அரசின் முடிவுக்கு சில மோட்டார் சைக்கிள் ‘டீலர்’கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து இருசக்கர வாகன ‘டீலர்’கள் கூறும்போது, ‘2 ஹெல்மெட்டுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை செலவிடவேண்டியது இருக்கும். இந்த தொகையை ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்து ஈடு செய்துகொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்’ என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News