செய்திகள்

புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்குபதிவு

Published On 2019-05-12 12:38 GMT   |   Update On 2019-05-12 12:38 GMT
புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் ஓட்டு போட மக்கள் ஆர்வம் காட்டாததால் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி:

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது.

பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 46 ஓட்டுச்சாவடிகளில் புதுவையில் ஒரு சில ஓட்டுச் சாவடிகளில் தவறுகள் நடந்ததாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்றது.

இதில் தமிழகத்தில் 13 ஓட்டுச்சாவடியிலும் புதுவையில் ஒரு ஓட்டுச் சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கட்டா நகர் 10-ம் எண் வாக்குச் சாவடியில் மாதிரி ஓட்டுப்பதிவில் குளறுபடி ஏற்பட்டது.

வாக்கு எந்திரத்தை சோதனை செய்வதற்காக முதலில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அந்த சீட்டுகளை அகற்றாமல் தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்ததால் பிரச்சினை உருவானது.

இதனால் வெங்கடா நகர் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது.

புதுவை வெங்கடா நகரில் மின் கட்டண வசூல் மையத்தில் வாக்குசாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, நிழற்பந்தல் உள்ளிட்ட அணைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

வெங்கட்டாநகர் வாக்கு சாவடியில் மொத்தம் 952 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் 473-ம், பெண்கள் 479ம் அடங்கும்.

மறுவாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக முகவர்கள் முன்னிலையில் விவி பாட் எந்திரத்தில் மாதிரி வாக்கு பதிவு சோதித்து காட்டப்பபட்டது.

மறுவாக்குப்பதிவில் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய போது ஒரு முதியவர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தார். மந்தகதியிலேயே வாக்குப்பதிவு நடந்தது.

வாக்காளர்கள் தனித் தனியாக ஒவ்வொருவராக வந்தே வாக்களித்தனர். வாக்குப்பதிவு தொடங்கிய. அரை மணி நேரத்தில் அதாவது 7.30 மணியளவில் 10 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட்டது.

மதியம் 1 மணி வரை 313 வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தனர். அதாவது 30 சதவீதம் அளவுக்கு பதிவாகி இருந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் மக்கள் வரவில்லை என்று கருதப்படுகிறது. மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News