வருகிற 27-ந்தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்க திட்டமிட்டுள்ளார். #PMModi #MaduraiAIIMS
மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலஆர்ஜிதம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் திட்டங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்னக ரெயில்வேயின் பல்வேறு திட்டப் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மதுரை-சென்னை இடையிலான அதிநவீன தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மோடி பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் நடத்துவதா? அல்லது மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தலாமா? என்பது குறித்தும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.
பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடம் இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து மதுரை ரிங் ரோடு மண்டேலா நகரில் பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்கும் மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக தனியாருக்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பளவிலான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திடல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டு மைதானத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை மாநில பா.ஜனதா செயலாளரும், பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளருமான சீனிவாசன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு பரிசாக தந்து விட்டு பிரதமர் மோடி மக்களை சந்திக்கிறார்.
அரசியல் களத்தில் மதுரை மிகவும் ராசியான ஊர் என்பதால் அன்றைய தினம் நடைபெறும் பா.ஜனதா மாநாட்டில் பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் மதுரையில் இருந்தே தொடங்குகிறார்.
மதுரை உள்ளிட்ட 10 பாராளுமன்ற தொகுதிகள் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #PMModi #MaduraiAIIMS