செய்திகள்
விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக வந்தபோது எடுத்தபடம்.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தராமல் விடமாட்டேன்- விஷ்ணுபிரியாவின் தந்தை பேட்டி

Published On 2018-05-09 06:44 GMT   |   Update On 2018-05-09 06:44 GMT
என் மகள் சாவுக்கான குற்றவாளிகளுக்கு என் உயிரே போனாலும் தண்டனை வாங்கி கொடுக்காமல் விட மாட்டேன் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார். #DSPVishnuPriya
கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. திருச்செங்கோட்டில் நடந்த இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விஷ்ணுபிரியா விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு விஷ்ணு பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றிய மகேஷ்வரி பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விஷ்ணுபிரியா மரணத்தில் மர்மம் இருப்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தோழிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் என்று பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் கடந்த மாதம் 16-ந் தேதி அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கு கைவிடப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்கு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டு ஒரு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக அறிவித்து உள்ளனர். எனவே வழக்கு சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் கூற இருந்தால் இன்று (9-ந்தேதி) கோர்ட்டில் ஆஜராகி கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தனது கருத்தை தெரிவிக்க இன்று கோவை தலைமை குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்ற நீதிபதி மலர்மன்னன் முன்னிலையில் ஆஜரானார். நீதிபதி மலர்மன்னன் வருகிற 24-ந்தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார்.


கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த விஷ்ணு பிரியா தந்தை ரவி நிருபர்களிடம் கூறியதாவது-

சி.பி.ஐ. அளித்த அறிக்கை என் கைக்கு வரவில்லை. அறிக்கை வந்த பின் அதனை படித்து என்ன சந்தேகம் உள்ளது என்பதை பார்த்து அடுத்த கட்ட முடிவு எடுப்போம்.

உயிர் என்பது சாதாரணமானதா? என் மகள் சாவுக்கான குற்றவாளிகளுக்கு என் உயிரே போனாலும் தண்டனை வாங்கி கொடுக்காமல் விட மாட்டேன். வழக்கை கைவிடும் எண்ணம் எனக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ரவி சார்பில் ஆஜரான வக்கீல் அனிதா ரவி கூறும் போது,சி.பி.ஐ. அறிக்கை எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. நிறைய சந்தேகம் உள்ளது. அந்த அறிக்கை எங்கள் கைக்கு கிடைத்து அதனை பார்த்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார். #DSPVishnuPriya

Tags:    

Similar News