கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கெயில் எரிவாயு குழாயுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி, செயலாளர் திருஞான சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் தங்கள் கையில் கெயில் எரிவாயு குழாய் என எழுதி வைத்திருந்த பெரிய குழாயை தூக்கி வந்தனர். தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது-
கெயில் எரிவாயு திட்டத்துக்காக கடந்த 2011-ம் ஆண்டு 3 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக இந்த திட்ட செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். அப்போது விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க கூடாது என மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.
விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதித்தால் விவசாய நிலங்களை விற்பனை செய்ய முடியாது. பயிர்களை சாகுபடி செய்ய முடியாது.
எனவே கெயில் எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைத்துறை பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும்.கேரளாவில் இருந்து வாளையாறு, திருமலையாம் பாளையம், செட்டிப்பாளையம், பல்லடம், திருப்பூர், ஓசூர் வரை நெடுஞ்சாலை அமைக்க திட்ட பணி அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே நெடுஞ்சாலையை ஒட்டி எரிவாயு குழாய் பதிக்க வேண்டும். இதில் தமிழக முதல்-அமைச்சர் தலையிட்டு விவசாயிகள் பாதிக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர். #tamilnews