செய்திகள்
நிருபர்களுக்கு நீதிபதி ராஜேஸ்வரன் பேட்டி அளித்த போது எடுத்தபடம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை: விசாரணை அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல்- நீதிபதி ராஜேஸ்வரன்

Published On 2017-11-28 08:01 GMT   |   Update On 2017-11-28 08:01 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை விசாரணை குறித்த இறுதி அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.
கோவை:

ஜல்லிக்கட்டு போராட்டங்களின் இறுதி நாள் நடந்த வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கோவையில் கடந்த ஆகஸ்டு மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தினார். 2-வது கட்டமாக இன்று கோவையில் விசாரணையை தொடங்கினார்.

இதற்காக கோவை வந்த அவர் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக கோவையில் 50 பேர் பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய்து இருந்தனர். கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த 3 நாள் விசாரணையின் போது 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் 15 பேர் நேரில் ஆஜராகி இருந்தனர். 5 பேர் வரவில்லை. மீதியுள்ள 30 பேருக்கு 2-வது கட்ட விசாரணையின் போது ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதில் 23 பேர் போலீசுக்கு ஆதரவாக வாக்குமூலம் தாக்கல் செய்து இருந்தனர். 7 பேர் பொதுமக்கள். இது தவிர திருச்சியில் இருந்து 2 போலீஸ் அதிகாரிகளும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. கடந்த முறை வரமுடியாத ஒருவர் இம்முறை ஆஜராக உள்ளார். மொத்தத்தில் 3 நாளில் 33 பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.


மொத்தத்தில் 1951 பேர் வாக்குமூலம் தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரமுடியாத சிலர் உரிய காரணங்களை கூறியதன் அடிப்படையில் அடுத்த விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் 996 பேர், சென்னையில் 858 பேர். கோவையில் 50 பேர், சேலத்தில் 11 பேர், திருச்சியில் 6 பேர் என மொத்தம் 1951 பேர் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்து உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் போலீசாருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். போலீசார் அத்துமீறி செயல்படவில்லை எனவும் கூறியுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும் போலீசாரும் ஏராளமான ஆதாரங்களை கொடுத்து உள்ளனர்.

சென்னையில் ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தடய அறிவியல் சோதனை தேவையில்லை. அது சம்பந்தமான வீடியோ காட்சிகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் தீ வைத்த நபர் குறித்து விசாரிக்க போலீசாருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பலரும் விசாரணைக்கு வருவதில்லை. சென்னையை பொறுத்த வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து விட்டதால் அவர்கள் வரவில்லை என கூறுகிறார்கள்.

இதில் போலீசார் யாரையும் மிரட்டவில்லை. பொதுமக்கள் யாருக்கும் அச்சப்படாமல் விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜராகலாம். போலீசார் யாரையாவது மிரட்டுகிறார்கள் என புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக விசாரணை கூண்டில் ஏற்றுவோம். ஒரு நபரிடம் விசாரிக்க ஒன்றரை மணி நேரமாகிறது. மதுரையில் டிசம்பர் 15-ந்தேதி முதல் விசாரணை நடத்த உள்ளோம்.

எனவே விசாரணை காலக்கெடு மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு தான் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சென்னையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஆணைய அதிகாரிகள் ராஜசேகர், மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News