செய்திகள்

கதிராமங்கலம் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

Published On 2017-08-09 06:34 GMT   |   Update On 2017-08-09 06:34 GMT
கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தின் போது ஜூன் 30-ந்தேதி போராட்டக்காரர்களால் போலீசார் தாக்கப்பட்டனர் அந்த தாக்குதலில் 3 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பஷீர் அகமது முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ஓ.என்.ஜி.சி. வக்கீல் மற்றும் அரசு வக்கீல்கள் தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்தனர்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி பசீர் அகமது பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை நீதிபதி பசீர்அகமது, பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட கோர்ட்டிலும், மற்ற 7 பேர் திருச்சி மாவட்ட கோர்ட்டிலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News