செய்திகள்

டி.என்.பாளையம் அருகே விவசாயிகளை மிரட்டி வரும் ஒற்றை யானை

Published On 2016-09-30 17:30 IST   |   Update On 2016-09-30 17:30:00 IST
டி.என்.பாளையம் அருகே விவசாயிகளை மிரட்டி வரும் ஒற்றை யானையால் அப்பகுதி மக்கள் வேதனையுடன் உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே வனப்பகுதி உள்ளது. ஓங்கிய மலைகளும் அடர்ந்த வனப்பகுதியுமான இந்த வனத்தில் யானைகள் காட்டெருமைகள், மான்கள் மற்றும் கரடி, சிறுத்தை போன்றவை ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகிறது.

டி.என்.பாளையம் வனப் பகுதியில் உள்ள குண்டேரிபள்ளம் அணைக்கு கூட்டம், கூட்டமாக தண்ணீர் குடிக்க வரும். இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள முட்டியாங்கிணறு என்ற பகுதியில் திடீர்.... திடீரென ஒரு ஒற்றை யானை புகுந்து அப்பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் மிரட்டி வருகிறது. அப்பகுதியில் உள்ள சித்தையன் என்பவரது தோட்டம் வனத்தையொட்டி உள்ளது. இந்த தோட்டம் அருகே ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. யானையை கண்டு நாய் குறைத்தது.

இதனால் தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்த சித்தையன் எழுந்து பார்த்தபோது யானை நிற்பதை கண்டு திடுக்கிட்டார். ஏற்கனவே தோட்டத்தில் தயாராக வைத்திருந்த பட்டாசுகளை எடுத்து வெடித்தார்.

மேலும் பட்டாசை பற்ற வைத்து தூக்கி வீசினார். இதன் சத்தத்தைக் கேட்டு அந்த ஒற்றை யானை அங்கிருந்து நகன்று காட்டு பகுதிக்குள் சென்றுவிட்டது. இதே ஒற்றை யானை இப்படி அடிக்கடி அப்பகுதிக்குள் நுழைந்து விடுவதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர்.

Similar News