உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வேடசந்தூரில் கள்ளக்காதலியை கொன்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது

Published On 2022-06-28 08:31 GMT   |   Update On 2022-06-28 08:31 GMT
  • வேடசந்தூரில் பெண் கொலை வழக்கில் மேலும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • 2 மாணவர்களும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள கீழதிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 30). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்.

முதல் கணவரை பிரிந்த பாண்டீஸ்வரி அதன் பின் அகில்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் கஞ்சா கடத்தி வரச் சென்ற போது அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.

அப்போது முதல் பாண்டீஸ்வரி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் வேடசந்தூர் அருகே உள்ள சேடப்பட்டியைச் சேர்ந்த கவுசிக் பாண்டி (25) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இவர்கள் 2 பேரும் சேர்ந்து திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதில் கிடைத்த பணத்தை பங்கு போட்டு செலவழித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு பணத்தை பங்கு போடுவதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே பாண்டீஸ்வரியை கவுசிக் பாண்டி கொலை ெசய்து ஒரு சாக்கு மூட்டையில் பூலாங்குளம் பகுதியில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து போலீசார் கவுசிக் பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது தாடிக்கொம்பு, வேடசந்தூர், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் பாண்டீஸ்வரி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுஸ்மிதா என்ற 9 மாத கர்ப்பிணியை கொலை செய்த வழக்கிலும் சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் வேறு சிலரும் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கவுசிக் பாண்டி தனது உறவினர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து முடித்த 2 மாணவர்களையும் உதவிக்கு அழைத்து இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களையும் கைது செய்து மேலும் ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News