search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர்.
    • சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

    அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அந்த விமானத்தில் கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக வந்த ஒரு பயணி மீது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த பயணியை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். மேலும் அந்தப் பயணி கம்போடியா நாட்டிலிருந்து, மலேசியா வழியாக சென்னைக்கு வந்துள்ளதால், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் அதிகமானது.

    இதை அடுத்து அவருடைய உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அவருடைய பைக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலை கண்டுபிடித்தனர்.

    அந்தப் பார்சலை அதிகாரிகள் பிரித்துப் பார்த்த போது, அதனுள் 3.5 கிலோ கொகைன் போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.35 கோடி என்று கணக்கிடப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

    இந்த போதை பொருளை யாரிடம் கொடுப்பதற்காக இந்தப் பயணி கடத்தி வந்தார்? சென்னைக்கு கடத்தி வரப்பட்ட காரணம் என்ன? இந்த போதைப் பொருள் கடத்தல் பயணியின், பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கடத்தல் பயணி எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருடைய பெயர் போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். ஆனால் இந்தப் பயணி சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இப்போது விசாரணை நடந்து கொண்டு இருப்பதால், இதுகுறித்து மேலும் எந்த தகவலும் வெளியிட முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    நேற்றைய தினம் அதிகாலை சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.35 கோடி மதிப்புடைய, போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விமான நிலையம் போதை பொருள் கடத்தும் மையமாக மாறி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.63 கோடி போதை பொருள் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
    • தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளை அடையாறில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், இயக்குனர் அறிவொளி, மாதிரி பள்ளிகள் இயக்குனர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாட நூல் கழக இயக்குனர் கஜலட்சுமி, தேர்வுத்துறை இயக்குனர் சேதுவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது பற்றியும் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடலாம் என்பது பற்றியும் விரிவாக விவாதித்ததாக தெரிகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மே 6-ந் தேதி தோவு முடிவுகள் வெளியாகும் என ஒரு தற்காலிக தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் வெளியிட வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். இதே போல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எந்த தேதியில் வெளியிட வாய்ப்பு உள்ளது? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.

    மாநிலம் முழுவதும் புதிய மாணவர் சேர்க்கை எந்த அளவில் நடைபெறுகிறது? எத்தனை லட்சம் மாணவர்கள் சேருவார்கள்? என்பது பற்றியும் ஆலோசித்தார். பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்குவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார்.

    இப்போது வெயில் சுட்டெரிப்பதால் பள்ளிக்கூடங்களை ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது கடந்த ஆண்டைப் போல் பள்ளி திறப்பை தள்ளி போடலாமா? என்பது பற்றியும் ஆலோசித்தார்.

    பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 3-ந்தேதி திறப்பதற்கு தயாராகி வருவதால் அந்த தேதியில் திறக்க சொல்லலாமா? அல்லது வேறு தேதியை அறிவிக்கலாமா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஜூன் வரை இதன் தாக்கம் இருக்கும் என தெரிகிறது. எனவே பள்ளிக்கூடங்கள் திறப்பதை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளி போட முடியுமா? என்று ஆலோசித்ததாகவும் தெரிகிறது.

    • குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
    • இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( வயது 26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம்பிடித்து கூட்டுறவுத்துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை காளியப்பசாமி, விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர்.

    சுபாஷினி கூறும்போது, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை இன்றைக்கு போட்டித்தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, "வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன், தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி-பழனியம்மாளின் மகள் ஆவார்.

    3 பேரும் கூறும்போது, தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றனர்.

    • கண்டக்டருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது
    • சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கே.கே.நகருக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்ஸை பாஸ்கரன் ஓட்டிச் சென்றார். இதில் கண்டக்டராக எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் திருமண மண்டபம் வழியாகச் சென்று ஒரு திருப்பத்தில் சற்று வேகமாக திரும்பியபோது, கண்டக்டரின் இருக்கை கழன்று முன்பக்க படிக்கட்டு வழியாக இருக்கையுடன் சேர்ந்து கண்டக்டர் முருகேசனும் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் வேறொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த பஸ்சினை பராமரிக்கும் போக்குவரத்துக் கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர், பொறியாளர் மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகிய 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் இன்று போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சாலையை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் கூறும்போது, சம்பவம் நடந்த இடத்தில் வளைவில் சாலையில் பள்ளம் உள்ளது. இதில் பஸ்ஸில் சக்கரம் இறங்கும்போது பஸ் சரிகிறது. இந்த சாலையை சீர் செய்வது தொடர்பாக கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்றனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.
    • படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வாசல் கிராம வெள்ளாற்றில், கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இதனால், தங்கள் பகுதியில் நீர் ஆதாரம் பாதிப்பதாக கூறி குவாரியை மூடக்கோரி, ஆற்றின் மறுகரையில் உள்ள அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராம மக்களுடன் அப்போதைய குன்னம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்த சிவசங்கர் தலைமையில், அனைத்துக் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டு கிராம மக்கள் தடையை மீறி குவாரிக்குள் நுழைந்து அங்கிருந்த வாகனங்களைத் சேதப்படுத்தியதால் போலீசார் தடியடி நடத்தினர்.

    இச்சம்பவத்தில் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட 37 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 5 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வேறு வழக்கில் சிறையில் உள்ளார். மீதம் உள்ள அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 28 பேர் கடலூர் முதன்மை நீதிமன்ற நடுவர் ஜவகர் முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

    இவ்வழக்கின் விசாரணையை வருகின்ற ஜூன் மாதம் 6-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததாவது:-

    திருச்சியில் பஸ்சில் இருந்த இருக்கையை சரி செய்ய முயன்றபோது கீழே விழுந்துள்ளது. இந்த பஸ்சானது, பழைய பஸ். அ.தி.மு.க. ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படவில்லை என்பதால் இது போல் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

    இந்த ஆட்சியில் புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது. தற்போது 350 பஸ்கள் புதிதாக வாங்கப்பட்டு இயங்கி வருகின்றது. மேலும் படிப்படியாக புதிய பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி அதுபோல் நிகழ்வுகள் ஏதும் நடக்காது. மேலும் இந்த ஆண்டுக்குள் அனைத்தும் சரியாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.
    • பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம் செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

    பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடை முறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குளோரின் கலனில் இருந்து திடீரென வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    • மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்புக்கான குளோரின் கலனில் இருந்து திடீரென குளோரின் வாயு கசிந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து குளோரின் கசிவால் 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    மேலும் தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கம் அடைந்தனர். 

    இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்டதால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாராளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.
    • டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மின்சார ரெயில்கள் மற்றும் பறக்கும் ரெயில்களில் பயணம் செய்ய காலை, மாலை நேரங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக செயலி மூலம் ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    வீடுகளில் இருந்தவாறே யூ.டி.எஸ். செயலியில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் பிளாட்பாரம் டிக்கெட்டுகளை சிரமமின்றி இனி முன்பதிவு செய்ய முடியும்.

    டிக்கெட் முன்பதிவு செய்து 2 மணி நேரத்தில் ரெயில் நிலையத்தை சென்றடைந்தால் பயணத்தை தொடரலாம். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க ரெயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரெயில் நிலையங்களுக்கு அருகாமையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது என்று முந்தைய விதிமுறை இருந்தது.


    இந்த புதிய செயலியை ஊக்குவிக்கவும், கவுண்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும் இது இப்போது தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பயணிகள் நலச்சங்க ஆர்வலர் சடகோபன் கூறுகையில், பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே டிக்கெட் எடுத்து கொள்ள இதன் மூலம் முடியும். இதனால் விரைவாக பயணத்தை தொடர முடியும் என்றார்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    2 மணிநேரத்திற்கு முன்பு பயணம் செய்வது உறுதியாக இருந்தால் வீடுகளில் இருந்தோ அல்லது நிலையத்திற்கு வெளியில் இருந்தோ டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றார்.

    • தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் காஞ்சி பட்டு சேலைகள் உலகப் புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. மத்திய அரசின் புவிசார் குறியீட்டை பெற்றுள்ள காஞ்சி பட்டு சேலைகள் சிறப்பு அம்சங்களை கொண்டவையாக திகழ்கின்றன.

    தங்கம், வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் 25 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சி பட்டு சேலைகள் தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் காஞ்சி பட்டு சேலைகளின் வியாபாரமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் ரூ.300 கோடி அளவுக்கு பட்டு சேலைகள் விற்பனையாகின்றன.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் காஞ்சி பட்டு சேலைகள் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் ஏரிக்கரையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தியாகும் ஜரிகையில் 0.5 சதவீதம் தங்கம், 40 சதவீதம் வெள்ளி, 35.5 சதவீதம் காப்பர், 24 சதவீதம் பட்டு இழை ஆகியவை சேர்க்கப்படும்.

    ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவுக்கு ஜரிகை இருக்கும். 5 கட்டைகளில் சுற்றப்பட்டுள்ள இந்த ஜரிகையை ஒரு மார்க் என்று அழைப்பார்கள். இந்த ஒரு மார்க் ஜரிகை ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம்-1.210 கிராம், வெள்ளி-96.8 கிராம், காப்பர்-85.91 கிராம், சில்க்-58.08 கிராம் சேர்க்கப்பட்டிருக்கும்.

    தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு சேலைகள் விலையை 30 சதவீதம் அளவுக்கு உற்பத்தியாளர்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளனர். காஞ்சி பட்டு சேலைகள் ரூ.10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலை உயர்ந்து பட்டு சேலைகளின் விலையும் அதிகரிப்பதால் விற்பனை பாதிக்கப்படும் என்று பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் நெசவாளர்களுக்கு எப்போதும் போல வேலையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு ஒரு மார்க் ஜரிகை ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.20 ஆயிரமாக விலை உயர்ந்து உள்ளது. ஒரே ரகத்தில் நெய்யப்பட்ட சேலை கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

    தேர்தல் காரணமாக கடந்த 1½ மாதமாக பட்டு சேலைகள் வியாபாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தங்கம், வெள்ளி விலையேற்றமும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையாகி வந்த பட்டு சேலை ரூ.15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும், இப்படி அனைத்து ரக சேலைகளின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர்.

    ×