செய்திகள்
இந்திய தேர்தல் ஆணையம்

தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம் எவ்வளவு?

Published On 2021-05-04 03:15 GMT   |   Update On 2021-05-04 03:15 GMT
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என்ற நோட்டாவிற்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 538 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சியான தி.மு.க. ஆட்சிக்கு வருகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும் பெற்ற ஓட்டு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அ.தி.மு.க. 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. 133 இடங்களில் (தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களும் சேர்த்து) வெற்றி பெற்றுள்ளது.



தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் 18 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலா 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 4 இடங்களிலும், பா.ம.க. 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தல் கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்ட இந்திய தேசிய முஸ்லீம் லீக், த.மா.கா., மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரங்களையும் அதன் சதவீதமும் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 6.28 கோடி வாக்காளர்களில் இந்தத் தேர்தலில் 4.57 கோடி பேர் வாக்களித்தனர். இதில் தி.மு.க., ஒரு கோடியே 74 லட்சத்து 30 ஆயிரத்து 100 ஓட்டுகள் பெற்றுள்ளது. அதன்படி தி.மு.க. 37.70 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது.

அ.தி.மு.க. - 1 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரத்து 974 வாக்குகள் - 33.29 சதவீதம்.

பா.ம.க. - 17 லட்சத்து 58 ஆயிரத்து 774 ஓட்டுகள் - 3.80 சதவீதம்.

பா.ஜ.க. - 12 லட்சத்து 13 ஆயிரத்து 510 ஓட்டுகள் - 2.62 சதவீதம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி - 5 லட்சத்து 4 ஆயிரத்து 537 ஓட்டுகள்- 1.09 சதவீதம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 3 லட்சத்து 90 ஆயிரத்து 819 ஓட்டுகள்-0.85 சதவீதம்.

தே.மு.தி.க. - 2 லட்சத்து 156 ஓட்டுகள் - 0.43 சதவீதம்.

காங்கிரஸ் - 19 லட்சத்து 76 ஆயிரத்து 527 ஓட்டுகள் - 4.3 சதவீதம்.

ஐ.யு.எம்.எல். - 2 லட்சத்து 22 ஆயிரத்து 263 ஓட்டுகள் - 0.48 சதவீதம்.

மற்ற கட்சிகள் - 66 லட்சத்து 84 ஆயிரத்து 174 ஓட்டுகள் - 14.5 சதவீதம்.

இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என்ற நோட்டாவிற்கு 3 லட்சத்து 45 ஆயிரத்து 538 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இது 0.75 சதவீதமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News