செய்திகள்
தேமுதிக

60 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி: தொடர் தோல்விகளால் தள்ளாடும் தேமுதிக

Published On 2021-05-03 12:28 GMT   |   Update On 2021-05-03 12:28 GMT
விஜயகாந்த் உடல்நிலை முன்புபோல் இல்லாத நிலையில், தே.மு.தி.க.வின் தொடர் தோல்வி காரணமாக அந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், மிச்சமிருக்கும் தொண்டர்களும் வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழ் திரை உலகில் அதிரடி கதாநாயகனாக ஜொலித்த விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கி, 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கினார்.

அந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத ஓட்டுகளை பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

அதன்பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கிய தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 7.9 ஆக இருந்தது.

இப்படி அடுத்தடுத்து 2 தேர்தல்களிலும் அந்த கட்சி தனி முத்திரை பதித்து இருந்தது.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. 14 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது. அப்போது 5 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருந்தது.

அன்றில் இருந்தே தே.மு.தி.க.வின் வீழ்ச்சி தொடங்கியது. இதன்பின்னர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்னிருத்தப்பட்டார். 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. அனைத்திலும் தோல்வியை தழுவியது.


இந்த நிலையில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வந்த தே.மு.தி.க. கேட்ட இடங்கள் கிடைக்காததால் கடைசி நேரத்தில் கோபத்தில் வெளியேறியது.

பின்னர் தினகரனின் அ.ம.மு.க.வுடன், தே.மு.தி.க. கூட்டணி அமைத்து 60 இடங்களில் போட்டியிட்டது. விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார்.

ஆனால் அவர் உள்பட அந்த கட்சியினர் யாருமே வெற்றி பெறவில்லை. படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

இப்படி தே.மு.தி.க. 2014-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் தோல்வியை சந்தித்து தள்ளாடி வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியில் இருந்து தொண்டர்கள். நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டியும், நிர்வாகிகள் பலர் விலகி மாற்று கட்சிகளில் இணைந்தார்கள். இப்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் வேறு கட்சிகளுக்கு சென்று விட்டதால், தே.மு.தி.க. தலைமை தவித்து வருகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை முன்புபோல் இல்லாத நிலையில், தே.மு.தி.க.வின் தொடர் தோல்வி காரணமாக அந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், மிச்சமிருக்கும் தொண்டர்களும் வழி தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதுபோன்ற தொடர் தோல்விகளில் இருந்து தே.மு.தி.க. மீளுமா? என்பது கேள்வி குறிதான் என்று அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

Tags:    

Similar News