செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்?- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2021-05-02 02:42 GMT   |   Update On 2021-05-02 02:46 GMT
புதுவை பிராந்தியத்தை பொறுத்தவரை முதலில் 8 தொகுதிகள், அடுத்ததாக 8 தொகுதிகள், அதன்பின் 7 தொகுதிகள் என வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் 1,558 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 10 லட்சத்து 4 ஆயிரத்து 197 வாக்காளர்களில், 8 லட்சத்து 20 ஆயிரத்து 446 பேர் வாக்களித்தனர்.

புதுவை பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும், காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்கால் அரசு கலைக் கல்லூரியிலும், மாகி மற்றும் ஏனாம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த பகுதிகளிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தேர்தல் நடந்து 24 நாட்களுக்குப் பின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.

புதுவை பிராந்தியத்தை பொறுத்தவரை முதலில் 8 தொகுதிகள், அடுத்ததாக 8 தொகுதிகள், அதன்பின் 7 தொகுதிகள் என வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை முதலில் 2 தொகுதிகள், அதன்பின் 2 தொகுதிகள், இறுதியாக ஒரு தொகுதி என வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏனாம், மாகி ஆகிய பிராந்தியங்களில் தலா ஒரு தொகுதி என்பதால் அதன் முடிவுகள் உடனே தெரிய வாய்ப்பு உள்ளது.

வாக்கு எண்ணும் பணிக்காக தேர்தல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஒரு அறைக்கு 5 மேஜைகள் வீதம் போடப்பட்டு உள்ளது. முன்னணி நிலவரம் காலை 11 மணியளவில் தெரியவரும். முதல் கட்டமாக எண்ணப்படும் தொகுதிகளின் இறுதி நிலவரம் பிற்பகல் 1 மணிக்குள்ளும், அடுத்த கட்ட தொகுதிகளின் இறுதி நிலவரம் மாலை 6 மணிக்குள்ளும், இறுதிகட்ட தொகுதிகளின் நிலவரம் நள்ளிரவு 12 மணிக்குள்ளும் தெரியவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் அணிகள் இடையே நேரடி போட்டி இருந்தநிலையில் தற்போது பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகின. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் புதுவையில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் அரசியல் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என்ற பரபரப்புடன் காணப்படுகின்றனர்.
Tags:    

Similar News