செய்திகள்
கமல், சீமான்

கமல், தினகரன், சீமான் 3-வது இடம் யாருக்கு?

Published On 2021-05-01 07:16 GMT   |   Update On 2021-05-01 07:16 GMT
மூன்று கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது 10 சதவீத வாக்குகள் வரை பிரியலாம் என்று கருதப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தை, அடுத்ததாக ஆளப்போவது யார் என்பது நாளை (மே 2) தெரிந்துவிடும். கடந்த மாதம் 6-ந் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

கொரோனா பரபரப்புக்கு இடையேயும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற பரபரப்பு இப்போதே ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் களத்தை அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய 5 அணிகள் சந்தித்தன.

இந்த அணிகள் சார்பில் 5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக மக்கள்முன் நிறுத்தப்பட்டார்கள். அதாவது அ.தி.மு.க. அணியில் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அணியில் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் சீமான், அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன், மக்கள் நீதிமய்யத்தின் கமல் ஆகியோர் முதல்வர் அரியாசனத்தை பெறுவதில் தீவிரமாக இறங்கினார்கள்.

ஆனால் அது யாருக்கு அரியாசனம் என்பதை மக்கள் ஏற்கனவே ரகசியமாக அறிவித்துவிட்டார்கள். நாளை வெளிப்படையாக தெரிவிக்கப்பட உள்ளது.

போட்டி கடுமையாக இருந்தாலும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு அணிகளும் முதல் மற்றும் 2-ம் இடத்தை கைப்பற்றும்.


டி.டி.வி.தினகரன், சீமான், கமல் ஆகிய மூவரில் மூன்றாவது இடத்தை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த மூன்று கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது 10 சதவீத வாக்குகள் வரை பிரியலாம் என்று கருதப்படுகிறது.

இதேபோல்தான் 2006 சட்டமன்ற தேர்தலின்போது விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கி தேர்தலை சந்தித்தார். அப்போது அந்த கட்சி பிரித்த வாக்குகள்தான் 141 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் வெற்றி தோல்வியை நிர்ணயித்தன. அதேபோல்தான் இந்த தேர்தலிலும் இந்த மூவரின் கட்சிகளும் பிரிக்கும் வாக்குகள்தான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டாலும் 2016 முதல்தான் தேர்தலை சந்தித்து வருகிறது.

வெற்றியோ, தோல்வியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது கொள்கையோடு மிகுந்த மனவலிமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சீமான் தனித்தே சந்தித்து வருகிறார்.

2016 தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிட்டு 4 லட்சத்து 58 ஆயிரத்து 104 வாக்குகள் பெற்றார். ஓட்டு சதவீதத்தில் 1.07 சதவீதம் பெற்று 9-வது இடத்தை பிடித்தார்.

2017 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 2.15 சதவீத வாக்குகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 16 லட்சத்து 95 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்றார்.

இந்த தேர்தலில் 50 சதவீதம் பெண்களுக்கு என்ற அடிப்படையில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கினார். அனைத்து தொகுதிகளிலும் பிரசாரமும் மேற் கொண்டார்.

சீமான், அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய கட்சிகளை ஆவேசமாக தாக்கி பேசிவருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் சீரான விகிதத்தில் அந்த கட்சி இளைஞர்கள் செல்வாக்கை தக்கவைத்துள்ளனர்.

அ.ம.மு.க.வை பொறுத்த வரை அ.தி.மு.க.வின் நீட்சியாகவே பார்க்கப் பட்டாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தனித்து போட்டியிட முடிவு எடுக்காமல் கடைசி நேரத்தில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து 171 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

தே.மு.தி.க. வாக்குகளை கூட்டணி கட்சிகளுக்கு பரிமாறுவதில் எப்போதுமே சிக்கல்தான். எனவே இந்த முறையும் தேர்தலுக்கு தே.மு.தி.க. வாக்குகள் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெறும் என்று கருதப்படுகிறது.

கமலின் மக்கள் நீதிமய்யம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற தொகுதிக்குள் அடங்கிய சுமார் 50 சட்டமன்ற தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்தது.

ஆனால் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழக இளைஞர் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளுடன் 81 தொகுதிகளை விட்டு கொடுத்துள்ளது. அதிலும் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் இல்லை.

கமல் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு மட்டும் பிரசாரத்தின்போது கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தார். எனவே பரவலாக எந்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 5.5, மக்கள் நிதிமய்யம் 3.72 சதவீதம், நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதம் பெற்றிருந்தன.

இந்த தேர்தலில் எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறது என்பதை பொறுத்து 3-வது இடத்தை பிடிக்கும் கட்சி முடிவு செய்யப்படும்.

அ.ம.மு.க., மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகளை ஒப்பிடும் போது இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்துக்கு வரலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த தேர்தலில் 3-வது இடத்தை பிடிக்கும் கட்சி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று சக்தியாக இருக்கும் என்பது மட்டுமல்ல எதிர்கால அரசியலிலும் தொடர்ந்து தடம்பதிக்கும்.

Tags:    

Similar News