செய்திகள்
தேர்தல் ஆணையம்

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

Published On 2021-04-28 13:01 GMT   |   Update On 2021-04-28 13:01 GMT
வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அன்று இரவே பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன.

சென்னையில் 16 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் 3 மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் வைத்து, ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளின் ஓட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தயாராக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்ற தொகுதி ஓட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 75 மையங்களில் 20 நாட்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகளும் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மே 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. அப்போது மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கையின் போது மின்சாரம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணும் மையங்களில் மின்விசிறி வசதி, குடிநீர் வசதி மற்றும் குளிர்சாதன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களும் கேமரா கண்காணிப்புக்குள் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கைக்காக 16 மேஜைகள் போடப்படுகிறது. இதில் ஒரு மேஜை தேர்தல் அதிகாரியின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும். இன்னொரு மேஜையில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். மீதமுள்ள 14 மேஜைகளிலும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் நடைபெறும். ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.



ஓட்டு எண்ணிக்கையின் போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு உத்தரவிட நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை அன்று கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கைக்கான மேஜைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து போதிய இடைவெளிகளுடன் வாக்கு எண்ணும் மையங்களில் போடப்பட்டுள்ளது. இதேபோன்று வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள், தேர்தல் ஆணைய ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டு எண்ணிக்கை விவரங்களை ஒவ்வொரு சுற்றுகளாக அறிவிப்பதை பத்திரிகையாளர்கள் தகவல் தொடர்பு அறையில் இருந்து தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறையில் இருப்பவர்கள் பயன்படுத்துவதற்காக தேவையான அளவு சானிடைசர்கள், முககவசங்களை வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்ததால் ஓட்டு எண்ணிக்கை சுற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் வெளியாவதற்கு 30 நிமிடங்கள் வரை ஆகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் முழுமையான முடிவுகள் நள்ளிரவிலேயே வெளியாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓட்டு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் முதலில் துணை ராணுவப் படையினரும், 2-வதாக தமிழ்நாடு சிறப்புபடை போலீசாரும், 3-வதாக ஆயுதப்படை போலீசாரும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கமி‌ஷனர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஏற்பாடுகள் 75 மையங்களிலும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

Tags:    

Similar News