செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கன்னியாகுமரி தபால் ஓட்டில் முறைகேடு- 30ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-04-28 09:28 GMT   |   Update On 2021-04-28 09:28 GMT
கன்னியாகுமரி தொகுதியில் 80 வயது முதியோரிடம் தபால் ஓட்டுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர்.
சென்னை:

கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குகளில் முறைகேடு நடத்த உள்ளதாகவும் அங்கு மறு தபால் வாக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி தி.மு.க .வேட்பாளர் ஆஸ்டின் மனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் ஓட்டுகள் மொத்தமாக 1833 உள்ளது. இவற்றில் 1761 தபால் ஓட்டுகள் பதியபட்டுள்ளதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இந்த ஓட்டுகள் தேர்தல் விதிமுறைகளின்படி தபால் ஓட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும் 80 வயது முதியோரிடம் தபால் ஓட்டுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளிப்படையாக வாங்கிச் சென்றுள்ளனர்.



அப்படி வாங்கும் தபால் ஓட்டுகளை அங்கேயே கையெழுத்திட்டு மடித்து வைக்காமல் தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று கையெழுத்திட்டு மடித்து சீல் வைத்துள்ளனர். எனவே, இந்த தபால் ஓட்டுகளை செல்லா ஓட்டாக மாற்றவும், குறிப்பிட்ட நபருக்கு ஓட்டு அளிக்கவும் வாய்ப்புள்ளது.

தபால் வாக்குகளில் முறைகேடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

இந்த மனு தொடர்பாக வரும் 30-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Tags:    

Similar News