செய்திகள்
தேனி மாவட்ட கலெக்டர் அலு லகத்துக்கு மனு கொடுக்க வந்த தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்.

போடி தொகுதியில் வாக்குப்பதிவு படிவங்களில் குளறுபடி- கலெக்டரிடம் தங்க தமிழ்ச்செல்வன் புகார்

Published On 2021-04-16 03:37 GMT   |   Update On 2021-04-16 03:37 GMT
போடி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு படிவங்களில் குளறுபடி உள்ளதாகவும், தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வலியுறுத்துவோம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனி:

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் தங்கதமிழ்செல்வன் 2 கோரிக்கை மனுக்களை கொடுத்தார்.

பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது யு.பி.எஸ். இயங்கவில்லை. 13 நிமிடங்கள் இந்த மின்தடை ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையில் உள்ள டி.வி. திரையும் இயங்கவில்லை. மின்தடை ஏற்பட்டாலும் ஒரு நிமிடம் கூட தடையின்றி மின்சாரம் கிடைக்க யு.பி.எஸ். மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் வைத்து இருக்க வேண்டும். எனவே பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தோம்.

வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரிக்கு முழுமையான சுற்றுச்சுவர் இல்லை. எனவே கல்லூரியின் பின்பகுதியில் பாதுகாப்பு வேலிகள் அமைத்து கூடுதல் மின்விளக்குகள் பொருத்த வேண்டும். இங்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தற்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கையும் நடப்பதால் பெற்றோர்கள் என்ற பெயரில் பலர் வந்து செல்கின்றனர். அவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஒரே பாதை உள்ளதால், கல்லூரிக்கு செல்பவர்களுக்கு மாற்றுப்பாதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கும், வாக்கு எண்ணும் அறைக்கும் இடையே இடைவெளி அதிகம் உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வரும் போது வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் உடன் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

போடி தொகுதியில் வாக்குப்பதிவு நாளில் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ‘17 சி' படிவம் வழங்கப்பட்டது. இந்த படிவத்தில் உள்ள விவரங்களும், மாவட்ட கலெக்டர் வெளியிட்ட இறுதி வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய பட்டியலில் உள்ள விவரங்களும் சில இடங்களில் வேறுபாடாக உள்ளது. இந்த குளறுபடிக்கான காரணத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக 57ஏ, 197, 280 ஆகிய வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு விவரங்களில் குளறுபடி உள்ளது. சுமார் 600 வாக்குகள் வரை வித்தியாசமாக உள்ளது. அதை சரிபார்க்க வேண்டும். இதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியாத பட்சத்தில் இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம். இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News