செய்திகள்
இரட்டை கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்திய காட்சி.

திமுக கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் - பாலகிருஷ்ணன் பேட்டி

Published On 2021-04-12 10:05 GMT   |   Update On 2021-04-12 10:05 GMT
வேளச்சேரியில் தேர்தல் விதிமீறில் நடைபெற்றுள்ளதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே முன் விரோதம் காரணமாக நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அரக்கோணத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்ற அவர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை மே 2-ந்தேதி நடைபெறுவது வேதனையளிக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணப்படுவதால் இந்த ஒரு மாதத்துக்கு அரசு செயல்படாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

வேளச்சேரியில் தேர்தல் விதிமீறில் நடைபெற்றுள்ளதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை. யார் வேண்டுமானாலும் வாக்குப்பதிவு பெட்டிகளை எடுத்துச் செல்லலாம் என்றால் தேர்தல் ஆணையம் அலட்சியமாக செயல்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியினர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை.

பா.ஜ.க. போட்டியிடும் தொகுதியில் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை மக்கள் வெறுக்கின்றனர்,

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News