செய்திகள்
கோப்புப்படம்

தமிழக சட்டசபை தேர்தல்- ஆண்களை விட 5.68 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்தனர்

Published On 2021-04-10 08:21 GMT   |   Update On 2021-04-10 08:21 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர்.

இந்த தேர்தலில் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்களித்தனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

ஆண்கள் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் வாக்களித்தனர். பெண்கள் 2 கோடி 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பேர் அதிகமாக வாக்களித்து உள்ளனர். இந்த தேர்தலில் 1 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 644 பேர் ஓட்டுப்போடவில்லை.

மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் 27 மாவட்டங்களில் அதிகமாக வாக்களித்து உள்ளனர். அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 158 தொகுதிகளில் பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர்.


வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்களித்து உள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருப்பூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் வாக்களித்து உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 12 லட்சத்து 9 ஆயிரத்து 458 பேர் வாக்களித்துள்ளனர். பெண்கள் 11 லட்சத்து 89 ஆயிரத்து 794 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 675 ஆண்களும், 12 லட்சத்து 6 ஆயிரத்து 426 பெண்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 லட்சத்து 88 ஆயிரத்து 919 ஆண்களும், 8 லட்சத்து 68 ஆயிரத்து 864 பெண்களும் ஓட்டு போட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் 10 லட்சத்து 15 ஆயிரத்து 461 பேர் அதிகமாக உள்ளனர். அதேபோல் வாக்குப்பதிவிலும் 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பெண்கள் அதிகம் வாக்களித்து முதலிடத்தை பெற்றனர்.

Tags:    

Similar News