செய்திகள்
முதல் வாக்கை பதிவு செய்த இளம் வாக்காளர்கள்

9 லட்சம் இளம் வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டனர்?- அரசியல் களத்தில் பரபரப்பான அலசல்

Published On 2021-04-07 06:34 GMT   |   Update On 2021-04-07 06:34 GMT
சென்னையில் பல தொகுதிகளில் நேற்று முதல் முறை ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் அளித்த பேட்டியில் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்திருந்தனர்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 72 சதவீதம் பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

முதல் முறை ஓட்டு போடும் இளம் வாக்காளர்களும் அதிக அளவில் ஓட்டு போட்டு உள்ளனர். சுமார் 9 லட்சம் (8 லட் சத்து 97 ஆயிரம்) இளம் வாக்காளர்கள் தங்களது வாக்கை இந்த தேர்தலில் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் யாருக்கு ஓட்டு போட்டனர் என்பது அரசியல் களத்தில் விவாதமாக மாறி இருக்கிறது. பலரும் இது பற்றி அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.


நேற்று சென்னையில் பல தொகுதிகளில் முதல் முறை ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் அளித்த பேட்டியில் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்திருந்தனர். இளைஞர்கள் அரசியலில் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் என்று அவர்களது விருப்பத்தை தெரிவித்தனர்.

இதன் மூலம் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இந்த தேர்தலில் கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்தவர்களும் தங்களது கட்சிகளுக்கு இளைஞர்களின் ஓட்டு அதிகம் விழுந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். புதிதாக இளைஞர்கள் பலர் தங்கள் கட்சிகளில் சேர்ந்து உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இதே போன்று இந்த தேர்தலில் பெண்களின் ஓட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 227 பெண் வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது ஓட்டை தவறாமல் அளித்துள்ளனர். வாக்குச்சாவடிகளில் அதிகமாக காணப்பட்ட பெண்கள் கூட்டமே இதற்கு சான்றாகும்.

அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் பெண்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தனர். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ரூ. 1,000-ம் வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இது போன்ற அறிவிப்புகளால் பெண்களின் ஓட்டு அதிக அளவில் எந்த கட்சிக்கு விழுந்துள்ளது என்பதும் பரபரப்பான பேச்சாக மாறி இருக்கிறது.
Tags:    

Similar News