செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன் பாத்திர கடை ஒன்றில் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும் - அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு

Published On 2021-04-04 02:52 GMT   |   Update On 2021-04-04 02:52 GMT
ஆவடி தொகுதியில் என்னை வெற்றி பெறச்செய்தால் அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை:

ஆவடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன், அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட காமராஜ் நகர், ஸ்ரீதேவி நகர், கவரப்பாளையம், சிந்து நகர், திருநின்றவூர் மெயின் பஜார், நெமிலிச்சேரி ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திருநின்றவூர் நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-

இந்த தொகுதியில் மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்தால் ஆவடியை மின் பகிர்மான கோட்டத்துடன் இணைப்பேன். திருநின்றவூர் பகுதியில் புதிய அரசு கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தருவேன். புதிதாக அம்மா உணவகம் திறக்கப்படும். பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அனைத்து திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும். வீட்டில் உள்ள பெண்களின் வேலை பளுவை குறைக்கும் வகையில் ஜெயலலிதா தனது ஆட்சியில் மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை வழங்கினார். அதேபோல் தற்போது பெண்களின் வேலை சுமையை மேலும் குறைக்கும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.



இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் உங்களுக்காக அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நான் உங்களுக்கு பெற்றுத் தர நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்த பாண்டியராஜன், தன்னை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News