செய்திகள்
கே.பாலகிருஷ்ணன்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் - கே.பாலகிருஷ்ணன்

Published On 2021-04-04 02:26 GMT   |   Update On 2021-04-04 02:26 GMT
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கூறினார். ஆனால் அவர் பதவிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை செய்யாததையா அவர் இப்போது செய்ய போகிறார்?.

தேர்தலுக்காக பொய் பிரசாரம் செய்கிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் சேது கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டு அதனை செயல்படுத்த முயலும் போது, அந்த திட்டத்தை தடுத்து விட்டனர். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் தென் மாவட்டங்களில் தொழில் வளம் எப்போதோ பெருகி இருக்கும்.

மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தல் நேரத்திலேயே பா.ஜ.க. வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்களை தரக்குறைவாக பேசுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் மகள் வீடு உள்பட 16 இடங்களில் வருமானவரி சோதனை நடந்தது. இது எதற்காக என்றால் வருமானவரி சோதனையை பயன்படுத்தி தி.மு.க.வினரின் தேர்தல் பிரசார பணிகளை முடக்குவதற்காக தான்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திண்டுக்கல்லிலும் பணப்பட்டுவாடா நடக்கிறது. அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். மக்கள் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி. அதன் பின்னர் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அதில் முதல் வழக்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீதான புகார் குறித்த விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News