செய்திகள்
டி.ராஜா

பா.ஜனதாவை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க.வை மக்கள் தண்டிப்பார்கள்- டி.ராஜா பேச்சு

Published On 2021-04-01 17:09 GMT   |   Update On 2021-04-01 17:09 GMT
விவசாயி என்று தன்னை கூறிக்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் துணிச்சல் இல்லை என்று டி ராஜா பேசியுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து, நேற்று கொங்கு மெயின்ரோட்டில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சி செய்து வருகிறது. பா.ஜனதாவை தூக்கி சுமக்கும் அ.தி.மு.க.வை மக்கள் தண்டிப்பார்கள். பா.ஜனதாவின் பொருளாதார கொள்கை, மக்கள் விரோதமானது. இந்த கொள்கைகள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமானது. தற்போது தமிழகத்தில் மதவாத அரசியல் நடந்து வருகிறது. அ.தி.மு.க. அரசு மாநில நலன் மற்றும் உரிமைகளை புறக்கணித்து பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது. தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு துரோகம் செய்துள்ளது. விவசாயி என்று தன்னை கூறிக்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் துணிச்சல் இல்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் நாடகமாடுகிறார். ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு போன்றவற்றால் திருப்பூரில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தை பா.ஜனதா அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

இவ்வாறு பா.ஜனதா அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கில் செயல்பட்டு வருகிறது. தோல்வி பயத்தின் காரணமாக தமிழகத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் படையெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகம் ஒளி பெற தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News