செய்திகள்
கல்வீச்சு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கடைக்கு கமல்ஹாசன் சென்று கடை உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார்

பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட கடைக்கு சென்று காலணி வாங்கிய கமல்ஹாசன்

Published On 2021-04-01 05:02 GMT   |   Update On 2021-04-01 05:02 GMT
பா.ஜனதா பேரணியின்போது கல்வீசப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவை:

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

அவரை வரவேற்கும் விதமாக புலியகுளம் பகுதியில் இருந்து ஏராளமான பா.ஜனதாவினர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தேர்நிலை திடலுக்கு சென்றனர்.

ஆதித்யநாத்தின் பாதுகாப்பு கருதி டவுன்ஹால், பெரிய கடை வீதி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாரதிய ஜனதாவினர் ஊர்வலமாக வந்தபோது பெரியகடை பகுதியில் ஒரு சில கடைகள் திறந்து இருந்தன.

இதை கண்ட பா.ஜனதாவினர் அந்த கடைகளை மூடுமாறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் திறந்திருந்த ஒரு செருப்பு கடை மீது கற்களை வீசினர்.

இதனால் அந்த பகுதியே பதட்டமாக காணப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தேர்தல் வீதிமுறையை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் கல்வீசப்பட்ட செருப்பு கடைக்கு சென்ற அவர் கடை உரிமையாளரிடம் சிறிது நேரம் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு கூடிய வியாபாரிகள், சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கவலை தெரிவித்தனர்.

இதற்கு நடிகர் கமல்ஹாசன், இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி அரசியல் ஆதாயம் அடைய நினைக்கின்றனர். அது அவர்களின் அரசியல் தரம். அந்த அரசியலுக்கு வழிமொழிதல் அல்லது பதில் கூறுவது என் தரத்தை குறைக்கும். இப்படிப்பட்ட சமூக விரோதிகளின் சதிகள் விரைவில் முறியடிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அந்த கடையில் தனக்கு பிடித்த காலணியை கமல்ஹாசன் விலைக்கு வாங்கி சென்றார்.

Tags:    

Similar News