செய்திகள்
தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரித்தார்

மணப்பாறையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்

Published On 2021-04-01 03:20 GMT   |   Update On 2021-04-01 03:20 GMT
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மக்கள் மத்தியில் கைகளை அசைத்து பிரசாரம் செய்தார்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க.-தே.மு.தி.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக வக்கீல் கிருஷ்ணகோபால் களத்தில் உள்ளார். இதையடுத்து அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் நேற்று இரவு மணப்பாறை பெரியார் சிலை அருகே பிரசாரம் மேற்கொண்டார். பிரசார வேனில் முன் இருக்கையில் அமர்ந்து வந்த விஜயகாந்தை பார்த்தும் மக்கள் ஆரவாரம் செய்தனர். மகிழ்ச்சி வெள்ளத்தில் வாகனத்தின் அவர்கள் முன்னே செல்ல அப்படியே பிரசார வாகனத்தை நிறுத்தினர். பின்னர் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விஜயகாந்த் மக்களை பார்த்து சிரித்தார்.

மேலும் அவரை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டியதை அறிந்து அவர் பிரசார வேனின் மேல் பகுதிக்கு வந்தார். மக்களை பார்த்து கையசைத்ததோடு முரசு சின்னம் இருந்த விளம்பர அட்டையை கையில் பிடித்தபடி நின்றார்.

சிறிது நேரத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி வெற்றி நமக்கே என்பது போல் காண்பித்தார். இதைப்பார்த்ததும் மக்கள் ஆரவாரத்தில் கைகளை தட்டியும், விசில் அடித்தும், விஜயகாந்த் வாழ்க என்ற கோஷமும் இட்டனர். சுமார் 10 நிமிடம் பிரசாரம் செய்த அவர் வேனில் நின்றபடியே சிறிது தூரம் சென்று பின்னர் அமர்ந்து கொண்டார். இந்த பிரசாரத்தில் அ.ம.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முசிறி சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு 10.30 மணிக்கு வருகை தந்தார். அவரைக் காண்பதற்காக 7 மணியிலிருந்தே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி கட்சியினர் முசிறி கைகாட்டியில் திரண்டிருந்தனர். பிரசாரம் நேரம் முடிந்து முசிறிக்கு வந்தாலும் விஜயகாந்த்தை காண தொண்டர்கள் முண்டியடித்து பிரசார வேன் அருகே சென்றனர். தொண்டர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த விஜயகாந்த் வேனில் நின்றபடி கையில் முரசு சின்னத்துடன் கையசைத்தார். சிறிதுநேரம் கைகளை உயர்த்திகாட்டியபடி நின்ற விஜயகாந்த் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News